சிறுவன் சுர்ஜித் அவலம் – கமல் ரஜினி கருத்து

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 3வது நாளாக 40 மணி நேரத்தைக் கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது.

தேசியப் பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், இறுதி முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் சுரங்கம் தோண்டி, அதன் மூலம் வீரர்களை அனுப்பி மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சுரங்கம் தோண்டும் ரிக் வாகனம் வரவழைக்கப்பட்டு, குழி தோண்டப்பட்டு வருகிறது. காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த சுரங்கம் தோண்டும் பணி, கடினமான பாறைகள் இருப்பதால் மெதுவாக நடந்து வருகிறது. இதுவரை 45 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தீபாவளி நாளாக இன்று தமிழகம் மட்டுமில்லாது, உலகத்தமிழர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு இடங்களில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட வேண்டி கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி பேசுகையில்,

சுர்ஜித் உயிருடன் நலமாக மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

மீட்பு முயற்சியில் அரசின் செயல்பாடுகளை குறைகூற முடியாது. கடந்த 36 மணிநேரத்துக்கும் அதிகமாக மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், தமிழகம் தாண்டிய தமிழ்கூறு நல்லுலகும் சிறுவன் சுர்ஜித் பற்றியே பேசிவருகின்றன.

Leave a Response