மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரசு கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது….
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அம்பானியோ, அதானியோ காரணம் இல்லை. விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் போன்ற ஏழை மக்கள் தான் காரணம். ஏழை மக்களுக்குப் பணம் கிடைத்தால் அவர்கள் பொருட்கள் வாங்கத் தொடங்குவார்கள். தேவை அதிகரிக்கும், உற்பத்தி அதிகரிக்கும்.
ஏழை மக்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.72 ஆயிரம் வருமானம் வழங்கும் காங்கிரசின் திட்டம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அடுத்த 6 மாதங்களில் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும். மோடி அரசு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்வரை வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வுகாண முடியாது.
பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நான் குஜராத் சென்றபோது சிறு, நடுத்தர வர்த்தகர்கள் பணமதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கையால் தங்கள் வியாபாரம் முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறினார்கள்.
அந்த வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி. செலுத்திய பின்னர் அதிகாரிகளுக்கு ஆண்டு முழுவதும் லஞ்ச வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலை நாடு முழுவதும் உள்ளது.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அவர்களது பணத்தை ஜேப்படி திருடர்கள் திருடுவார்கள். அதேபோல மோடியின் ஒரே வேலை உங்களது கவனத்தை திசைதிருப்பி உங்கள் பணத்தை சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களுக்கு மாற்றிவிடுவதுதான்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு ரூ.35 ஆயிரம் கோடி. ஆனால் மோடி அரசு ரூ.1.25 லட்சம் கோடிக்கு கம்பெனிகள் வரியை ஒரே நாளில் தள்ளுபடி செய்துள்ளது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமானத்துக்கு பூஜை செய்துள்ளார். ஆனால் ரூ.35 ஆயிரம் கோடி இந்த விமான ஒப்பந்தத்தில் திருடப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்துக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண காங்கிரசு-தேசியவாத காங்கிரசு அரசைத் தேர்ந்தெடுங்கள். தேர்தலுக்குப் பின்னர் மராட்டியத்தில் புதிய அரசு அமையும். அந்த அரசு ஏழைகள், விவசாயிகள், சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்காகப் பாடுபடும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.