காங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி? – சீமான் விளாசல்

அக்டோபர் 12 சனிக்கிழமை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜீவ் காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தும் சீமானை தேசத் துரோக வழக்கில் கைது செய்யவேண்டும். நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார்.

தேர்தல் நடத்தை விதியை சீமான் மீறியதாக தமிழ்நாடு காங்கிரசு செயல் தலைவரான எம்.பி ஜெயக்குமார் விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரசு முன்னாள் தலைவர் தங்கபாலு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.

சின்னமலையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரசுக் கட்சியினர் எரித்தனர்.

இவை குறித்து ஊடகங்களிடம் சீமான் தெரிவித்த கருத்துகள்….

28 வருடங்களாக எங்கள் தலைவரைக் கொன்றுவிட்டார்கள் என காங்கிரசும், எங்கள் பிரதமரைக் கொன்றுவிட்டார்கள் என பா.ஜ.க-வினரும் எழுவர் விடுதலைக்குத் தொடர்ந்து இடையூறாக இருப்பதால்தான் இப்படிப் பேச வேண்டிய தேவையே உருவாகிறது.

‘காந்தியை கோட்சே சுட்டது சரிதான். ஆனால், கொஞ்சம் தாமதமாகச் சுட்டுவிட்டார்’ எனத் தொடர்ந்து பா.ஜ.க-வினர் பேசியபோதும், காந்தியின் உருவப்படத்தை பெண் சாமியார் ஒருவர் நிற்கவைத்து சுடும்போதும், காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என வினாத்தாள் தயார் செய்தபோதும் அமைதியாக இருந்த காங்கிரசுகாரர்கள், நான் பேசும்போது மட்டும் கொந்தளிப்பது ஏன்? விடுதலைப்புலிகளைப் பற்றி பேசும் காங்கிரசுகாரர்கள், அமைதிப்படை செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசாதது ஏன்?

விடுதலைப்புலிகளை மொத்தமாக அழித்துவிட்டோம் எனச் சொல்லிவிட்டு, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தடைவிதிப்பது ஏன்?

இந்தியா தடையாக இருப்பதால்தான் சர்வதேச தளத்தில் இன்னும் ஈழப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு இன உணர்ச்சி இருக்கிறது. என் கண் முன்னால் என் இனம் செத்திருக்கிறது. அந்த வன்மம் எனக்கு எப்போதும் இருக்கும்.

எது தேசத் துரோகம்? காவிரியில் நதிநீர் வாங்கித் தர முடியாத கட்சிக்கு தேச ஒற்றுமை குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது? பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது, தேச ஒற்றுமை பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சில நாள்களுக்கு முன் கர்நாடகாவில், தமிழ்ப் பாடல் ஒலித்த மண்டபம் ஒன்றுக்குள் நுழைந்து கன்னடர்கள் அடித்து நொறுக்கினார்கள். தேச ஒற்றுமையைப் பேசும் காங்கிரசுகாரர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தேசத் துரோக வழக்கு ஒன்றும் எனக்குப் புதிதல்ல.அதை சட்டப்படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Response