
அண்மையில், 2025 மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதித்தணிக்கை அறிக்கை, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், ஒன்றிய அரசின் கணக்குகளில் ரூ.54,282.32 கோடி நிதி, கணக்கில் வராத செலவினமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
15 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மொத்தம் 33,973 பயன்பாட்டுச் சான்றிதழ்களை வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படாததால் ஒதுக்கப்பட்ட நிதி திட்டமிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என சிஏஜி அறிக்கை கூறுகிறது.
இதில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அதிகபட்சமாக ரூ.18,272.91 கோடி நிலுவைத் தொகையை வைத்துள்ளது.
உயர்கல்வித் துறை ரூ.14,359.76 கோடி செலவுக்கான கணக்கை இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளது.
நிலுவையில் உள்ள தொகையில் ரூ.38,287.52 கோடி கடந்த 3 நிதியாண்டுகளுக்கு உரியது.
இதுதவிர, ரூ12,754.47 கோடி மதிப்பிலான செலவினங்கள் தவறான கணக்கு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, அணுசக்தித் துறை ரூ.3,089.97 கோடி வருவாய் செலவினங்களை செய்து, அவற்றை மூலதன தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது கடுமையான தடை செய்யப்பட்ட நடவடிக்கை என சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், ரூ.4,011.91 கோடி மதிப்பிலான வரவுகளிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை தவறான வரி வருவாயக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய தவறுகள் அரசின் உண்மையான நிதி நிலைக்கு எதிரான பார்வையை அளிப்பதாக சிஏஜி அறிக்கை எச்சரித்துள்ளது.
அரசு வசூலித்த வரிகள் மற்றும் செஸ் வரியிலிருந்து ரூ.9,222 கோடி நிதி, கல்வி, சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நோக்கங்களுக்கு இன்னமும் மாற்றப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
எந்த நோக்கத்திற்குச் செலவு செய்யப்பட்டது என்பதை மறைக்கும் வகையில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான செலவினங்கள் இதர வரவு செலவுக்கான மைனர் ஹெட் 800 என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பிரிவு ஒரு முதன்மை பதிவுப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரூ.44,714.77 கோடி தவறான பரிமாற்றப் பதிவால் பாதகமான இருப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிஏஜி கூறுகிறது.
ரிசர்வ் வங்கியுடன் ஒப்பிடுகையில், ஒன்றிய அரசின் கணக்குகளில் ரூ.3,880.67 கோடி ரொக்க இருப்பு இன்னும் சரிபார்க்கப்படாமல் இருப்பதாகவும் சிஏஜி கூறி உள்ளது.
செலவு செய்த நிதிக்கு 15 அமைச்சகங்கள் கணக்கு தராமல் இருப்பதன் மூலம் ரூ.54 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் வரிப்பணத்தைக் கையாள்வதில் ஒன்றிய அரசு பொறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக்குழு விரிவான விசாரணை நடத்தவும் வலியுறுத்தி உள்ளன.
இவ்வளவு பெரிய தொகைக்குப் பயன்பாட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருப்பதும், தவறான வகைப்பாட்டில் இருப்பதும் பட்ஜெட் தாக்கலையே தவறாகக் காட்டக்கூடும் என அரசியல் சாராத பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது, வரும் நாட்களில் மோடி அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறக்கூடும் என்றும் சொல்கின்றனர்.
