
மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது….
2019 மக்களவைத் தேர்தலை கொள்கைக்கான களமாகவே பார்க்கிறோம். பிரச்சினைகள் வந்து விடக்கூடாது. வாக்குகள் சிதறி, பிரிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அகில இந்தியத் தேர்தல் என்பதால் மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதால் திமுக – காங்கிரசு தலைமையிலான கூட்டணிக்கு தார்மீக அடிப்படையில் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்.
பாஜகவுக்கு மாற்று காங்கிரசுதான். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக எதிர்ப்பலை வலுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக – காங்கிரசு தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும். 30 க்கும் அதிகமான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெறும்
இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்தார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுகவுக்கு ஆதரவளித்திருப்பதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


