
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
234 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை.யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவானது.அதன்பின் காங்கிரசு, விசிக,முஸ்லிம் லீக் மற்றும் பொதுவுடைமைக் கட்சிகள் ஆதரவில் ஆட்சியமைத்திருக்கிறார் விஜய்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில்….
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தி.மு.க. சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது….
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும்,முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள்.இந்த நேரத்தில், 17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கும் தலைவர் எங்கள் உயிரான மு.க.ஸ்டாலினுக்கும்,பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,நிர்வாகிகள்,தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள்,எல்லோவற்றிற்கும் மேல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றி.
தலைவரின் வழிகாட்டுதலின்படி,சட்டமன்றத்திலும் -மக்கள் மன்றத்திலும் – சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்னது போல் ‘எதிரிக்கட்சியா இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்’. மக்களுக்கும் – அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்கதான் இனி இருப்போம்.என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்த பொறுப்புக்கு நான் 100 சதவீதம் உண்மையா இருப்பேன்.கடுமையாக உழைப்பேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


