தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்திற்கான 2வது கட்ட படப்பிடிப்பிற்காக உத்தரகாண்டில் உள்ள டேராடூன் நகருக்கு சென்றிருந்தார். இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து இன்று இரவு சென்னை வந்தடைந்த அவர், அங்கிருந்து நேராக கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி ஸ்டாலின், அழகிரி, கனிமொழியிடம் நடிகர் ரஜினிகாந்த் விசாரித்து உள்ளார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி. அவரது உடல்நலம் பற்றி ஸ்டாலின், அழகிரி, கனிமொழியிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.