தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு

18 ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியன களத்தில் இருக்கின்றன.

பாஜக கூட்டணியில் பாஜக 19 இடங்களிலும், பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 இடங்களில் களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் அமமுக 2 இடங்களிலும், ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒரு தொகுதியில் களம் காண்கிறது. இதே போன்று ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் தாமரை சின்னத்தில் களம் காண்கிறது.

இந்த நிலையில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாமரை சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தது. அதன்பின் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களும், முன்னாள் கவர்னர், திருமதி தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் தெரிவித்த வாழ்த்தை அறிக்கை மூலம் அனைவருக்கும் தெரிய வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த்தின் சம்மதத்துடன்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும்.அப்படியெனில் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்குத்தான் தன்னுடைய ஆதரவு என்பதை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

Leave a Response