சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு அரசியல் களம் குறித்து இருவரும் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 2 ஆம் தேதியே ரஜினியைச் சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தச் சந்திப்பு தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி விக்கிரவாண்டியில் மாநாடு ஒன்றையும் நடத்தினார். அப்போது திராவிடமும், தமிழ்த் தேசியமும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறியதை சீமான் கடுமையாக விமர்சித்தார். அதற்கு முன்பு விஜய்யை ஆதரித்துப் பேசி வந்த சீமான் அதன் பிறகு விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் விவாதமானது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாறி மாறி வார்த்தைகளால் தாக்கிக் கொண்டே இருக்கின்றனர். இந்தச் சூழலில் சீமான் ரஜினியை நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ரஜினி காந்த் இரசிகர்கள் நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் கடுமையாகத் தாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இச்சிக்கலில் சீமானுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதைக் காட்டும் விதமாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்றும் இது வெறுமனே மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கடந்து போகக் கூடிய செய்தியில்லை அரசியல் களத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக இருக்கும்.மேலும், இச்சந்திப்பு விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.