மேடையில் கண்ணீர்விட்டு அழுத கர்நாடக முதல்வர் – மக்கள் அதிர்ச்சி

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாகப் பதவி ஏற்றவர்கள் மற்றும் முதலமைச்சர் குமாரசாமிக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சார்பில் பெங்களூரு ஜே.பி.பவனில் நேற்று மதியம் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் தேவேகவுடா தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் குமாரசாமி பேசியதாவது:-

சட்டசபைத் தேர்தலின் போது எனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் முழு ஆதரவு அளித்தார்கள். அன்பை வெளிகாட்டினார்கள். மக்கள் என் மீது காட்டிய அன்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஜனதாதளம்(எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் என்று நினைத்தேன். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் மக்கள் நான் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிந்தது. மக்கள் என்னையும், ஜனதாதளம்(எஸ்) கட்சியையும், எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் புறக்கணித்து விட்டார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது மாநில மக்கள் ஆதரவு அளித்தாலும், ஓட்டுப் போடும் போது ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை மறந்து விட்டார்கள். நான் முதல்-மந்திரியானதால் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் சந்தோஷமாக உள்ளனர். ஆனால் நான் முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை. எனது தந்தை, தாயின் ஆசிர்வாதம், கடவுள் அருளால் முதல்-மந்திரி ஆனேன். 37 எம்.எல்.ஏ.க்கள் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியில் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளேன்.

12 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையின் எதிர்ப்பை மீறி முதல்-மந்திரி ஆனேன். தற்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 2 மாதத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். நான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியவில்லை. ஆனால் மாநில மக்களின் அன்பை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். மாநில மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி, கல்வி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இதற்காக மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

நான் முதல்-மந்திரி பதவியை காப்பாற்ற விரும்பவில்லை. அதற்காக நேரத்தை செலவு செய்யவும் விருப்பம் இல்லை. இந்த பதவியில் இருக்கும் போது மாநில மக்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இதற்காக எந்த தொந்தரவு வந்தாலும், அதனை சரிசெய்து சிறப்பான ஆட்சியை மாநில மக்களுக்கு கொடுப்பேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

முன்னதாக விழாவில் பேசத் தொடங்கிய முதலமைச்சர் குமாரசாமி, மாநில மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும், தன்னையும் புறக்கணித்து விட்டதாகக் கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். அதன்பிறகு நான் முதலமைச்சராக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை என்று கூறிய போதும் கண்ணீர் விட்டு அழுதார்.

இது கர்நாடக மக்களிடம் அதிர்ச்சியையும் கர்நாடக அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response