
தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்துக்குக் கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது.
பெங்களூரு மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று
( மார்ச் 6, செவ்வாய்க்கிழமை) திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலையின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் திருச்சி சிவா, கனிமொழி, தம்பிதுரை, உள்ளிட்டோர் பங்கேற்று காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை வஞ்சிக்கக் கூடாது என்று குரல் எழுப்பினர்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறும்போது, ”தமிழகத்தின் பொது பிரச்னைக்காக திமுக, அதிமுக எம்பிக்கள் ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினோம். உடனே காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும். தமிழகம் வஞ்சிக்கப் படக் கூடாது” என்றார்.
போராட்டம் குறித்து தம்பிதுரை கூறும்போது,
காவிரி பிரச்சினையில் நீதி கிடைக்கும்வரை வரை நாடாளுமன்றத்தை நடக்கவிட மாட்டோம். காவிரி பிரச்சினை என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது.உணர்வின் அடிப்படையில் அதிமுக, திமுக எம்பிக்கள் இணைந்து காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தின. திமுக எங்களுடன் இணைந்து போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார்.
திமுகவும் அதிமுகவும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆளும் பாஜக அதிர்ச்சி அடைந்திருக்கிறது என்கிறார்கள்.


