காங்கிரசில் பெண்கள் முன்னேறக்கூடாது என நினைக்கிறார்கள் – ஸ்ரீநிதி வெளிப்படை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரசு தேசிய இளைஞரணிச் செயலாளரும்,2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டவருமான ஸ்ரீநிதி மோகன் திமுகவில் இணைந்தார்.

அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி,ஆ.ராசா,உதயநிதி ஸ்டாலின்,முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி,செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் ஸ்ரீநிதி மோகன் அளித்த பேட்டியில்….

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும் என்று எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.காங்கிரசுக் கட்சியில் இருக்கக்கூடிய உட்கட்சிப் பூசலால் எங்களால் தொகுதியில் வேலை செய்யமுடியவில்லை.தேர்தல்தேதி அறிவித்த நாளிலிருந்து காங்கிரசுக் கட்சியில் இருக்கக்கூடிய பெண் தலைவர்கள்,கொங்கு மண்டலத்திலிருந்து பெண்கள் கட்சியில் முன்னேறக்கூடாது என்று நினைத்தார்கள்.ஒரு சிலரின் சுயநலத்திற்காக தவெகவுடன் காங்கிரசுக் கட்சி இணைந்துள்ளது.ஒரு மாயையை நோக்கி கவர்ச்சியை நோக்கி இன்று இளைஞர்கள் சென்று கொண்டிருக்கக்கூடிய நிலையில் அவர்களை நல்வழிப்படுத்த திமுக மிகவும் முக்கியம்.இன்றைய இளைஞர்களின் தேவை திராவிட சித்தாந்தம்தான்.பெயரளவில் பெரியாரை வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி என அறிவித்துக் கொள்கிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து,காங்கிரசு முதன்மை உறுப்பினர் மற்றும் தேசிய செயலாளர் பதவிகளிலிருந்து ஸ்ரீநிதி மோகன் விலகினார்.

அதன்பின் அவர் வெளியிட்டிருந்த பதிவில்…

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் உண்மை கண்டறியும் குழுவில் ஆஜராகி,கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் எனக்கு எதிராக சொந்தக்கட்சியினரே செயல்பட்டது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தேன்.
உண்மையாக தேர்தலில் களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.ஆனால் அளித்த வாய்ப்பை உண்மைவழி நின்று உழைத்து தோற்றதும் மகிழ்ச்சிதான்.
காங்கிரசு வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது என்று சில நிர்வாகிகள் செயல்பட்டது கட்சிக்குப் பெரியபாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து திரு.இராகுல்காந்தி அவர்களுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற அவரது எண்ணம் பாராட்டத்தக்கது.ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் சிலர் அதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.
இன்று எனது மனவேதனையையும் ஆதாரங்களையும் பதிவு செய்துள்ளேன். இனி முடிவு காங்கிரசின் தலைமையின் கைகளில் உள்ளது என்று கூறியிருந்தார்.

Leave a Response