
பாசக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் தமிழ்மாநில
காங்கிரசு,2019 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.பின்னர்,அதிமுக ஆதரவுடன் ஜி.கே.வாசன் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடர்ந்த நிலையில்,6 இடங்களில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது.2024 மக்களவைத் தேர்தலில் பாசக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதும், தமாகா கூட்டணியில் நீடித்தது.அந்தத் தேர்தலில் 3 இடங்களில் சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய சனநாயகக் கூட்டணியில் 5 இடங்களில் தாமரை
சின்னத்தில் போட்டியிட்ட தமாகா அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில்,தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமாகாவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள்,செயற்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,கட்சியின் தலைவர்
ஜி.கே.வாசன் தலைமையில் எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் அடுத்து வருவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ரீதியாக வெற்றிபெற என்ன தேவை? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து கட்சியின் நிர்வாக அமைப்பைச் சீரமைக்க ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரம்,தேர்தல் முடிந்தநிலையில் தமாகா தனி நிலைப்பாட்டில் பயணித்தல் உட்பட 8 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது….
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின்பு அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கிறது.
2014 முதல் 2026 வரை தொடர்ந்து 12 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில்,கூட்டணிகளில் தமாகா பங்கு பெற்றும், எங்களது இலக்கை எங்களால் அடையமுடியவில்லை.குறிப்பாக கடந்த 3,4 தேர்தல்களில் எங்களது கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.கூட்டணியில் இருக்கும்போது கட்சியின் பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் குறைவதாகவும்,கூட்டணி அரசியலில் கட்சியின் வளர்ச்சி குறைவதாகவும் நிர்வாகிகள் கருதுகின்றனர்.தேர்தல் நேரத்தில் கூட்டணி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
அதேநேரம் தேர்தல் இல்லாத நேரத்தில் மாவட்டத் தலைவர்களும்,மாநில நிர்வாகிகளும்,பொறுப்பாளர்களும்
தங்களுடைய கட்சிப் பணிகளைப் பொறுப்புணர்வுடன் செய்யக்கூடிய நிலை ஏற்படவேண்டும்.
அதற்கு உள்ளாட்சித் தேர்தல் வரும்வரை தமாகா தனித்தன்மையோடு செயல்படவேண்டும் என நிர்வாகிகள்
விரும்புகிறார்கள்.அதனடிப்படையில் மத்தியில் பாசக,மாநிலத்தில் அதிமுக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து தமாகா நட்பு கட்சியாகவே விலகுகிறது.இனி எங்களை வலுப்படுத்தி கொள்ள நகரம் முதல் கிராமம் வரை மீண்டும் கட்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்து தவெக அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்து,அடுத்து வரும் தேர்தல்களைச் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகவும் அதன் காரணமாகவே கூட்டணியிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இன்னொருபுறம், தனிக்கட்சியை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை என்பதால் தாய்க்கட்சியான காங்கிரசுடன் கட்சியை இணைத்துவிடலாம் என்று ஜி.கே.வாசன் எண்ணுவதாகவும் அதுதொடர்பான முயற்சிகளில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


