அண்ணாமலைக்கு எதிரானவர்களுக்குப் பொறுப்பு – ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

ஏப்ரல் மாதத்தில்,தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தது அக்கட்சித் தலைமை.

அவர் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்படும்போது,தமிழ்நாட்டில் 16 மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் 16 மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

இந்நிலையில்,புதிய நிர்வாகிகள் பட்டியலை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஒப்புதலோடு நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவர்களாக எம்.சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால்கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என்.சுந்தர் என 14 பேரும், அமைப்புச் செயலாளராக கேசவ விநாயகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில பொதுச்செயலாளர்களாக வி.பாலகணபதி, ராம னிவாசன், எம்.முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி.முருகானந்தம் என 5 பேரும், மாநிலச் செயலாளர்களாக முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், மலர்கொடி, சுமதி வெங்கடேசன், மீனாட்சி, சதீஷ்குமார், மீனாதேவ், வினோஜ் பி.செல்வம், அஸ்வத்தாமன், ஆனந்த பிரியா, பிரமிளா சம்பத், கதளி நரசிங்கபெருமாள், நந்தகுமார், ரகுராமன், அமர்பிரசாத் ரெட்டி என 15 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர், இணை பொருளாளராக சிவசுப்பிரமணியம், மாநில அலுவலக செயலாளராக சந்திரன், சமூக ஊடக அமைப்பாளராக பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக மகேஷ்குமார், மாநில தலைமை செய்தி தொடர்பாளராக நாராயணன் திருப்பதி, மாநில ஊடக அமைப்பாளராக ரெங்கநாயகலு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே பாஜக இளைஞரணி தலைவராக இருந்த ரமேஷ் சிவா மாற்றப்பட்டு மாநில இளைஞரணி தலைவராக எஸ்.ஜி.சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 இல் தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக கே.டி.ராகவன் பதவி வகித்து வந்தார். தற்பொது வெளியாகியுள்ள மாநில நிர்வாகிகள் பட்டியலில், தமிழ்நாடு பாஜகவின் மாநிலப் பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி தமிழ்நாடு பாஜகவில் உள்ள 20 பிரிவு அமைப்புகளுக்கும் பொறுப்பாளராகச் செயல்படக்கூடியது. இணை பொறுப்பாளராக நாச்சியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக இந்தப் பதவி உருவாக்கப்பட்டு, ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் கட்சியில் பலம் பெற்று வருவதை காட்டுகிறது. மாநிலத் தலைவருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய பதவியாக பார்க்கப்படுவதால் கட்சி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இவர் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரானவர்.இவர் மட்டுமின்றி நேற்றைய அறிவிப்பில் இடம்பெற்றுள்ள குஷ்பு உள்ளிட்ட முக்கியமான பலர் அண்ணாமலைக்கு எதிரானவர்கள்.இப்படி இந்த அறிவிப்பில் அண்ணாமலைக்கு எதிரான நிறையப் பேருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response