கீழடி விசயத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாடு – பலர் பாராட்டு

சிவகங்கையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 30 புதன்கிழமையன்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

அதிமுக ஆட்சியில் தான் முதன்முதலாக கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின.முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை கடந்த 2015 முதல் 2017 வரை மத்திய அரசு நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியில் துறை அனுமதி பெற்று 2018 இல் அதிமுக அரசு மேற்கொண்டது. 2019 இல் 5 ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த ரூ.12.5 கோடியில் கீழடி அகழ்வைப்பகம் அமைக்க அடிக்கல் நாட்டினோம். அதன் பிறகு தான் ஆட்சி மாற்றம் வந்தது.

அதிமுக அரசு 6 கரிம மாதிரிகளை அமெரிக்கா நாட்டில் புளோரிடா ஆய்வகத்துக்கு அனுப்பியதில், கீழடி நாகரிகத்தின் காலம் கிமு 6 ஆம் நூற்றாண்டு என உறுதி செய்யப்பட்டது.

2018 இல் நான் சட்டப்பேரவையில் பேசியபோது, ‘கீழடி ஆய்வு நம் பாரம்பரியப் பெருமையை உணர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது’ என குறிப்பிட்டேன். அதிமுக அரசு, அமெரிக்கா சிகாகோ நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நிதியுதவி செய்தது. அங்கு முதன்முறையாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தினோம். அந்தக் கண்காட்சிக்கு ‘கீழடி என் தாய்மடி’ என பெயரிடப்பட்டது.

மேலும் 6,720 தொல்பொருட்களை மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து கண்காட்சியைத் தொடங்கி வைத்தோம். 2020 இல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கத்திலும் கீழடி தொல் பொருட்களைக் காட்சிக்கு வைத்தோம். ஆனால் கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.

தொல்லியல் துறைக்கு அதிமுக அரசு 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.105 கோடி நிதி ஒதுக்கியது. தமிழ்நாட்டில் நடந்த 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வில் அதிமுகவுக்கு பங்கு உண்டு. மைசூரில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு காட்சிப்படுத்திய பெருமை அதிமுக அரசுக்கு உண்டு.

கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. இதில் எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது. கீழடி அகழாய்வு அறிக்கையில் மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது? . திமுக அரசு என்ன விளக்கம் கொடுத்தது? என்பது பற்றி எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதற்குச் சரியான விளக்கத்தைக் கொடுத்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. கீழடி ஆய்வுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. கீழடி விவகாரத்தில் மாநில அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தன்னுடைய பரப்புரையில் திமுக அரசைக் கடுமையாகச் சாடிவரும் எடப்பாடி பழனிச்சாமி,தமிழரின் தொன்மை மற்றும் பெருமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கீழடி அகழாய்வு விசயத்தில் திமுக அரசுக்குத் துணை நிற்போம் என்று சொல்லியிருப்பதற்கு தமிழின உணர்வாளர்கள் உட்பட பலரும் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response