
அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
பாஜகவுக்கு எவ்வளவோ விசுவாசமாக இருந்தும்,நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் இணைந்து போட்டியிட்டிருந்தும் பாஜக தொடர்ந்து தன்னைப் புறக்கணித்ததால் நொந்துபோயிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி இராமச்சந்திரன்…
தேசிய ஜனநாயகக் கூட்டணி உடனான உறவு முறிந்தது. ஒருமித்த கருத்தாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளோம். இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறமாட்டோம்.
எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை. கூட்டணியில் இருந்து விலகிய காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடறியும்.நாங்கள் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி இராமச்சந்திரன் பேட்டியளித்த போது ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.


