ஓபிஎஸ் அறிக்கை பாஜக நெருக்கடி – மாற்றிப் பேசிய எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று எடப்பாடி பழனிச்சாமி திருச்சி சென்றார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி….

இதுவரை 49 சட்டமன்றத் தொகுதிகளில் பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக் உள்ளது. பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது.தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசு தலைமையில் தவெக இணைந்து 3 ஆவது கூட்டணி அமையுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. அதனடிப்படையில் அந்த அந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் என்று எடப்பாடி பதில் அளித்தார்.

பாஜக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் வந்தால், அதிமுகவின் நிலை என்ன? என்ற கேள்விக்கு, எடப்பாடி, கற்பனையாக கேட்கும் கேள்விக்கு, யூகத்தின் அடிப்படையில் என்னால் பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்த அந்தக் கட்சித் தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார்.

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு அதுபற்றி அவரிடம் தான் கேட்கவேண்டும் என்று எடப்பாடி பதில் அளித்தார்.

வடமாவட்டங்களில் பரப்புரை செய்தபோது வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்துப் பேசியதற்கு, தென்மாவட்டங்களில் உங்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறதே என பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு எடப்பாடி, அது எல்லாம் முடிஞ்சு போன கதை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம். இதை எல்லாம் பத்திரிகையில் போட்டு விறுவிறுப்பான செய்தி வரணும், மக்களிடம் குழப்பத்தை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரி கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று ஆவேசமாக பதில் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்தப் பேட்டியில், பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணியில் உள்ளன. தேர்தல் அறிவித்தபின் கூட்டணியில் யார்?யார்? இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் இப்படிச் சொல்ல பாஜகவின் நெருக்கடிதான் காரணம் என்கிறார்கள்.இந்தக் கூட்டணிக்குள் சசிகலா,ஓபிஎஸ்,டிடிவி.தினகரன் ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.ஆனால்,எடப்பாடி பழனிச்சாமியோ அவர்களைச் சேர்க்க முடியாது என்றே பேசிவருகிறார்.

இதனால்,இதுவரை ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவே பேசிவந்த ஓபிஎஸ், நேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.இதனால் திடுக்கிட்ட பாஜகவினர்,இப்படியே விட்டால் எதிர்ப்பு இன்னும் அதிகமாகிவிடும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர்.அதன் எதிரொலியே எடப்பாடி இவ்வாறு கூறியுள்ளார் என்று சொல்கின்றனர்.

Leave a Response