
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்தது.மேலும் அதிமுக சமஉக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில் கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில்,மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவரிசையில்,தென்காசி,கன்னியாகுமரி,தூத்துக்குடி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது,கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகள் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும்.
சமூகவலைதளங்களில் நமது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.இளைஞர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.எம்ஜிஆர்,ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் அமைக்க ஒவ்வொரு நிமிடமும் நாம் கடுமையாக உழைக்கவேண்டும்.
மாற்றுக் கட்சிக்குச் சென்றவர்களைப் பற்றிக் கவலையில்லை.ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள் எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பேசிய நிர்வாகிகள்,ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குச் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை.இதனால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.தற்போது ஆங்காங்கே முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவதால்,எதிர்வரும் இடைத்தேர்தல்,உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே,வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும்,கட்சியை மீண்டும் பலப்படுத்தி திமுக மற்றும் தவெகவுக்கு இணையான போட்டியை அளிக்கவும் சசிகலா,டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்.அப்போதுதான் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது என்றும்,இதைக் கேட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமி, கட்சியைப்பலப்படுத்தும் நடவடிக்கைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.நீங்கள் உங்களுக்கான தேர்தல் பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள் எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்,டிடிவி தினகரனை மீண்டும் இணைக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்தபோது,அவர் வேறொரு கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்ததார் என்று சொல்லப்பட்டது.
தற்போது மீண்டும் தென்மாவட்ட நிர்வாகிகள்,சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பகிரங்கமாகத் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் எனச் சொல்லப்படுவது அதிமுக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.


