
2024 ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்,ஜூலை 18 மாலை 5.30 மணியளவில்,டெல்லியிலுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 400 படங்கள் பார்வையிடப்பட்டு,அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.தேர்வுக்குழு தலைவராக ஜெயராஜ் செயல்பட்டார்.
ஆவணப்படங்கள், குறும்படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுகளுக்கு இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டார்.முழுநீளத் திரைப்படங்களுக்கான பிரிவில் நடனஇயக்குநர் கலா தமிழகத்தில் இருந்து சென்று செயல்பட்டார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.மலையாளத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’ என்ற படத்தில் நடித்த மம்மூட்டிக்கும்,‘சந்து சாம்பியன்’ என்ற இந்திப்படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.சிறந்த நடிகைக்கான விருது, இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகிள் 370’ என்ற படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்ப்படவுலகிற்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.‘அமரன்’ படத்துக்கு 3 விருதுகள்,‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு 2 விருதுகள்,‘மகாராஜா’ படத்துக்கு 2 விருதுகள் மற்றும் ‘ராயன்’,‘மெய்யழகன்’,‘ப்ளூ’ (ஆவணப்படம்) ஆகிய படங்களுக்கு தலா 1 விருது என்று,மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன.
தனுஷ் எழுதி இயக்கி நடித்த‘ராயன்’ படம்,சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சிறந்த தேசியநலன்,சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் என்று தேர்வு செய்யப்பட்ட ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்துக்கும் மற்றும் இதில் நாயகனாக நடித்திருந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புவிருதும் கிடைத்துள்ளது.
சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்).சிறந்த துணை நடிகை: சாச்சனா நமிதாஸ் (மகாராஜா). ஸ்பெஷல் ஜூரி விருது:கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ என்ற படத்தின் சிறந்த ஒலிக்கலவைக்காக டி.எஸ்.ஹரிஹரசுதன்.சிறந்த இசை அமைப்பாளர் பிரிவில் சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்).சிறந்த படத்தொகுப்பு: ஆர்.கலைவாணன் (அமரன்).சிறந்த சண்டைப்பயிற்சி இயக்குநர்: அனல் அரசு (மகாராஜா). ‘ப்ளூ’ என்ற ஆவணப்படம். மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்தும், அதில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகள் அறிவிப்புக்குப் பெரும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
பலர் இதுகுறித்து கருத்துகள் தெரிவித்துவருகின்றனர்.அவற்றில் ஒன்றாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும் சமூகநீதித்துறை அமைச்சருமான வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்….
பாஜகவின் வெறுப்பரசியல் படைப்புலகிலும் தொடருகிறது என்பதற்கான உதாரணம்,கடந்த 2024ஆம் ஆண்டுக்கான 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்புதான்.
விருது வென்றுள்ள திரைல்கலைஞர்களுக்கும்,தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலை என்றால் அது படைக்கப்படும் சமூகத்தின் கலாச்சாரத்தை,பண்பாட்டை,அம்மக்களுக்கான அரசியலைத் தாங்கி நிற்கும்.அதுபோலவே திரைப்படங்களும் சமூகத்தின் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன.இன்று அந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்குப் பின்னால் உள்ள சனாதன அரசியலையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
காஷ்மீரிகளின் அரசியலமைப்புச் சட்ட உரிமையான பிரிவு 370 ரத்தை அடிப்படையாகக் கொண்டு,ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதப் போக்கை நியாயப்படுத்தும்’ஆர்டிகள் 370’எனும் வெளிப்படையான இசுலாமிய வெறுப்புப் பரப்புரைப் படத்துக்கு சிறந்தபடத்துக்கான தேசியவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப்படத்தின் நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருது கொடுத்துள்ளார்கள்.
வீர(?)சாவர்க்கர் என்ற படத்தை இயக்கிய நடிகர் ரந்தீப்ஊடாவுக்கு சிறந்த புதுமுகஇயக்குநர் என்று தேசியவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே 2024 காலகட்டத்தில் தமிழில் வெளியான படைப்புகளின் பட்டியலைப் பார்த்தால் நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்,அவை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் நமக்கு எளிதில் புரிந்துவிடுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை,இயக்குநர் வினோத்ராஜின் கொட்டுக்காளி,இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான்,அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்து – இசைஞானி இசையில் வெளிவந்த ஜமா,இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதியின் மகாராஜா,அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் லப்பர்பந்து என புறக்கணிக்கப்பட்ட படங்களின் பட்டியல் நீள்கிறது. இவையெல்லாம் அடித்தட்டு மக்களின் சமூக வாழ்வியலை சிறப்பாகவும் யதார்த்தமாகவும் படைப்பாக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக,வாழை திரைப்படம் வந்தபோது கட்டாயம் இந்தப்படம் தேசியவிருதுக்குத் தகுதியான
கலைப்படைப்பு என மக்கள் கொண்டாடினார்கள்.அதுபோலத்தான் நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளியும் கொண்டாடப்பட்டது.இப்புறக்கணிப்பு,தமிழர்களின் பெரும்பான்மை மக்களின் உணர்வு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கருதமுடிகிறது.
பழங்குடிகளுக்கு எதிரான இந்திய ஒன்றியஅரசின் வன்முறையை அம்பலப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படமும்,அதே ஒன்றியஅரசின் கொள்கைகளால் காஷ்மீரில் வீரமரணமடைந்த நிஜ ராணுவ வீரரின் கதையைச் சொன்ன இராஜ்குமார் பெரியசாமி இயக்கி,நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த’அமரன்’ திரைப்படமும் 2024 இல் தான் வெளிவந்தது.
தமிழிலும்,இந்திய அளவிலும் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் மீதான விமர்சனங்களை ஒருசாரார் முன்வைத்தாலும்,தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளும் அவை புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னுள்ள நுண் அரசியலும்தான் ஒன்றிய பாஜகஅரசின் மக்கள்விரோதப் போக்கை அம்பலப்படுத்துகிறது.அதுவே புறக்கணிப்பட்ட அப்படைப்புகளுக்கான உயர்ந்த அங்கீகாரமாகவும் மக்கள் மன்றத்தில் என்றும் கொண்டாடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


