தடையை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணி – தில்லி பரபரப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி,நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர்,விஜய் சவுக்,இந்தியா கேட்,அமைச்சர்கள் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜன்பத், ராஜீவ் சௌவ், பட்டேல் சௌக் உள்ளிட்ட மெட்ரோ தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மாணவர்கள் பெண்கள் பொதுமக்கள் என தொடர்ந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குவிந்திருக்கிறார்கள்.பல்வேறு மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டாலும் சாலை மார்க்கமாக மக்கள் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருப்போர் சொல்கின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்துக்குப் பேரணி செல்ல முயன்றதால் கரப்பான் பூச்சி கட்சியினர்-காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தடுப்புகளை மீறிப் பேரணியாக செல்ல கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முயற்சி செய்தனர்.தடுப்புகளை மீறி வருபவர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி வருகின்றனர்.

தடையை மீறினால் கைது என்கிற எச்சரிக்கையியும் மீறி ஆயிரக்கணக்கானோர் அந்தப்பகுதியில் குவிந்துவருகின்றனர்.

சந்திரசேகர் ஆசாத்,நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட அந்தப்பேரணியில் பல புகழ்பெற்றோரும் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிவருகின்றனர்.

Leave a Response