
நீட் தேர்வில் ஒவ்வொரு முறையும் முறைகேடுகள் நடப்பதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி,தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜூலை 20 அன்று இவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசி,தடியடி நடத்தி பலரின் மண்டைகளை உடைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜூலை 21 அன்றும் அதாவது நேற்றும் அந்தப் போராட்டம் தொடர்ந்தது.அதன் எதிரொலியாக,தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில்,தமிழக தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் குரல் கொடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டார்.இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.சிறிது நேரத்தில் அவரை மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்,முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசினார் என்று சொல்லப்பட்டது.அவர் உள்ளே செல்லும்போது உங்களுக்கு முதல்வரை நன்றாகத் தெரியும்,அப்படியிருக்கும்போது போராடியது ஏன்? என்ற கேள்விக்கு, மாணவர்களை அடிக்கக்கூடாது.அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார்.
அவர் வெளியே வரும்போது,அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வந்தார்.தெருக்குரல் அறிவின் கைபிடித்து அழைத்துவந்த அவர்,அறிவை மகிழுந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்துவிட்டுச் சென்றார்.
இவையனைத்தும் நேற்று மதியம் நடந்தது.
இந்நிலையில் இரவு ஒன்பது மணியளவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்….
நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்;போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச்செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.
நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்;மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது.இந்தநிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது.எனவே,தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச்சந்திப்பில்,மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன்.
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.
அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்தார் என்று செய்திகள் வந்தன.ஆனால் அவரோ,நான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
இது பல ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தெருக்குரல் அறிவு,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை எழுதி,இசையமைத்துப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் நேற்று நடந்த நிகழ்வையும் தொடர்புபடுத்திப் பாருங்கள் என்கிற கருத்துகள் உலாவருகின்றன.
என்ன நடந்தது? என்பதை சார்ந்தோர் வெளிப்படையாகச் சொல்லும்வரை வெளியே தெரியாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.


