அமித்ஷா ஓபிஎஸ் சந்திப்பு – எடப்பாடி அச்சம்

இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் எனக் கூறப்படுகிறது. யார் யாருடன் இணைகிறார்கள், இடங்கள் எப்படி பகிரப்படும், கூட்டணியில் யார் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது விரைவில் தெளிவாகும்.

இந்த வார இறுதியில் அமித் ஷாவின் சென்னை பயணம் தமிழ்நாடு அரசியலின் எதிர்கால அரசியல் கூட்டணியை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான சந்திப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அமித்ஷா அழைப்பின்பேரில், ஓ.பன்னீர்செல்வம் திருவனந்தபுரத்தில் இருந்து இரகசியமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மாலை 3 மணிக்கு டெல்லியில் இறங்கியவர், அதன்பின்னர் மாயமானார். அதேநேரத்தில், அதிமுக உடைப்புக்குக் காரணமாக இருந்த ஆடிட்டர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அன்றிரவு உள்துறை அமைச்சரின் இல்லத்தில் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பி.எல்.சந்தோசும் இருந்துள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைப்பது அல்லது புதுக்கட்சி ஆரம்பித்து பாஜக கூட்டணியில் இணைவது என்று பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எடப்பாடி சம்மதிக்க வேண்டும். அவர் சம்மதிக்காத பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றிவிட்டு, புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வது குறித்தும் அப்போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமித்ஷாவின் திட்டத்துக்கு வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அனைவரும் சம்மதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து டிடிவி தினகரனையும் சென்னை வரும்போது சந்தித்துப் பேச அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதனால் அடுத்த வாரம் சென்னை வரும்போது அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி…

அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி, அமித்ஷாவிடம் விவாதித்து விட்டு வந்திருக்கிறேன். அப்போது செங்கோட்டையனைப் பற்றி பேசுவதற்கு தேவை ஏற்படவில்லை. அமித்ஷாவிடம் பேசியது அனைத்தையும் இப்போது உங்களிடம் சொல்லி விட்டேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தனக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தை அமித்ஷா அழைத்துப் பேசியிருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

இதற்குச் சான்றாக, எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் சேலத்திலிருந்து கோவை விமான நிலையம் சென்றார். அவருக்கு விமானநிலையத்தில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது, சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டபோது எந்தப்பதிலும் கூறவில்லை. தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கும் எந்தப் பதிலும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக விமான நிலையத்திற்குள் சென்று விட்டார் என்பதைச் சொல்கிறார்கள்.

Leave a Response