தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றம் – அண்ணாமலை உறுதி

1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது தீவிரவாத தாக்குதல். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என தொடர்ந்து கூறி வருகிறார். தமிழ்நாட்டில் பேருந்து, பள்ளி, கல்லூரி என பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அரசு கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியா கொண்டு வர அதிபர் ட்ரம்ப்பிடம் அனுமதி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடிக் கொண்டு வருவோம். பாஜக கட்சி ஒரு சமுதாயத்துக்கான கட்சி அல்ல. இந்திய கலாச்சாரத்துக்கு ஆதரவான கட்சியாகும். அனைவரும் மே 21 ஆம் தேதி பயங்கரவாதத்துக்கு எதிரான சங்கல்பத்தை ஏற்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.அப்போது அவர் கூறியதாவது….

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.விஜய் பாஜகவிற்கு எதிரான கருத்துகளை வைத்திருந்தாலும் எந்தப் பாகுபாடும் இன்றி பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவராக யார் வரவேண்டும்? என்பதை எங்களது கட்சித் தலைவர்கள் தீர்மானிப்பார்கள். யார் எந்தப் பொறுப்பில் இருக்க வேண்டும்? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். அண்ணாமலை இந்தக் கட்சியில் தொண்டனாக எப்போதும் இருப்பான்.

தலைவர்கள் மாறித்தான் ஆக வேண்டும். தலைவர்கள் மாறுவது தான் பாஜகவின் அடிப்படை அழகு. கட்சி வளர வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. பாஜக தமிழ்நாடு தலைவர் பதவி குறித்து காலம், நேரம் வரும் போது பதில் சொல்வோம். மோடி எங்களை வழி நடத்துகிறார். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், தலைவர்கள் மாறித்தான் ஆகவேண்டும், தலைவர்கள் மாறுவதுதான் பாஜகவின் அடிப்படை அழகு, அண்ணாமலை இந்தக் கட்சியில் தொண்டனாக எப்போதும் இருப்பான் என்றெல்லாம் அவர் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவது உறுதியாகிவிட்டது என்பதைத்தான் இந்தக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response