விஜய்க்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு – கே.பி.முனுசாமி சந்தேகம்

நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஒன்றிய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

இந்தத் தகவல் வெளியான பின்பு,கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அவரது கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன்பின் செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது….

அரசியலில் மிகப் பெரிய அனுபவம், ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவர் செங்கோட்டையன். அவரை ஜெயலலிதா மதிப்பும், மரியாதையுடன் நடத்தினார். அதேபோல் தான் எடப்பாடி பழனிச்சாமியும் நடத்திச் செல்கிறார். அவரது மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, கட்சியைக் காட்டிக் கொடுத்துவிட்டு எதிரணியில் சேர்ந்து அமைச்சராக இருக்கிறார். ஆனால், எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது.

ஒன்றிணைவதில் எனக்கு எந்தவித நிபந்தனையும் இல்லை எனக் கூறும் ஓபிஎஸ், அடுத்த கணமே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார். கட்சியை எதிர்த்தும், எதிரிகளுடன் இணைந்து களத்தில் நிற்கிறார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு ஜானகியம்மாள் பெருந்தன்மையுடன் கட்சியில் இருந்து விலகி, தலைமைக் கழகத்தை வழங்கிவிட்டுச் சென்றார். ஆனால், கட்சியில் சிலர் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, வசதிகளை பெருக்கிக் கொண்டு இக்கட்சியைச் சிதைக்க நினைக்கிறார்கள். இது என்ன மாதிரியான நிலை? எடப்பாடி பழனிச்சாமி குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு எவ்விதத் தகுதியும், தார்மிக உரிமையும் கிடையாது. அரசியல் ரீதியாக எதிரணியாக எங்களை விமர்சிக்கலாம். ஆனால் எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு அவருக்கு உரிமையில்லை.

ஒரு கட்சியின் தலைவராகவும் நடிகராகவும் இருக்கக் கூடிய விஜய், செல்லும் இடத்தில் கூட்டம் சேரும் என்ற அடிப்படையில் அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக அவரை சந்தோசப்படுத்துவதற்காக கொடுத்திருந்தால்? பாஜகவின் திட்டம் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஒரு கட்சியில் பிளவு ஏற்படும்போது விதி 15-ன் அடிப்படையில் சின்னங்கள் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் உள்ளே நுழைவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் விசாரித்தால் மகிழ்ச்சி. நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response