இலங்கையில் மிகப்பெரும் பேரவலம் நடக்கும் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீர்ந்து விடப்போவதில்லை. உணவுப் பற்றாக்குறைவு தானாகத் தீரும் என்று எவரும் காத்திருக்கவேண்டாம். மீட்பர்கள் எவருமிலர்; பட்டினிச் சாவில் இருந்து எங்களை நாங்களேதான் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (14.06.2022) அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு மீண்டெழப் பதினெட்டு மாதங்கள் ஆகும் என்று அறிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தங்களால் ஐந்து வருடங்களில் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சாதாரண மக்கள் அடுத்த மாதம் பற்றியோ, அடுத்த வருடம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. அடுத்த வேளைக்குச் சாப்பாடு கிடைக்குமோ என்றே அங்கலாய்க்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தலாம் என்று ஜக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை அல்ல. உணவுற்பத்தி குறைந்து வருவதாலும் உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாலும் ஒருவர் நாளாந்தம் எடுக்கும் உணவின் அளவு குறைந்து வருகிறது. பசியால் மயங்கி விழுகின்ற சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

பொருளாதார நெருக்கடி எப்போது தீரும் என்று எமது தலைவர்கள் சோதிடக்காரர்கள்போல ஆருடங்களை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளிடம் இருந்து கடன்பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். மக்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு எந்தவொரு தீர்வையும் அவர்கள் முன்வைக்கவில்லை. நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய அவர்களால் அதற்கான தீர்வை முன்வைக்கவும் இயலாது.

போர்க்காலங்களில் தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் நெருக்கடிகளைவிட மிகமோசமான நெருக்கடிகளையெல்லாம் அனுபவித்திருந்தார்கள். ஆனால், அப்போது மக்களின் பாதி வலிகளை விடுதலைப்புலிகள் தங்கள் தோள்களில் தாங்கியதால் நெருக்கடிகளை எங்களால் கடந்துவர முடிந்தது. தற்போது, ஒவ்வொருவரும் எங்களால் இயன்றளவு உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் மாத்திரமே ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முகங்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response