ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப இவ்வளவு தொகையா? – மக்கள் அதிர்ச்சி

ஐபிஎல் டி20 எனப்படும் மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாகப் பிரித்து ஏலம் விடுவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது.

மின்னணு ஏலத்தின் 2 ஆம் நாளான நேற்று ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் மூலம் பிசிசிஐக்கு ரூ.44,075 கோடி வருமானம் கிடைக்கும்.

5 வருட காலத்தில் ஐபிஎல் தொடரில் மொத்தம் 410 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் தொலைக்காட்சி உரிமம் ரூ. 23,575 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு ஆட்டம் மட்டும் ரூ.57.5 கோடிக்கு ஏலம் சென்றுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமம் ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 கோடி வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இரு பிரிவையும் சேர்த்து ஒரு ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமம் வழியாக ரூ.107.5 கோடி வருமானத்தை பெற உள்ளது பிசிசிஐ.

கடந்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியிருந்தது.

தற்போது இதைவிட இரண்டரை மடங்கு அதிகம் விலைக்கு ஏலம் சென்றுள்ளது.

மின்னணு ஏலம் 3 ஆவது நாளாக இன்றும் தொடர உள்ளது. இதில் 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை (முதல் போட்டி, பிளே ஆஃப் சுற்றின் 4 ஆட்டங்கள், வார இறுதியில் ஒரே நாளில் நடத்தப்படும் இரு ஆட்டங்கள்), உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. ஒரு ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமம் வழியாக ரூ.107.5 கோடி வருமானத்தைப் பெற உள்ளது பிசிசிஐ.

இவ்வளவு பெரிய தொகை இதில் புழங்குவது கண்டு வெகுமக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Leave a Response