ஐபிஎல் ஏலம் – கோடிகளில் விலை போன வெளிநாட்டு வீரர்கள் இலட்சங்களில் தமிழக வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தமாக 332 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், டெலே ஸ்டெயின், மேத்யூஸ் ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், இயன் மோர்கன், ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஜம்பா, ஷான் மார்ஷ், டேவிட் வில்லி, கைல் அபோட், கேன் ரிச்சர்ட்சன், இந்திய அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ.1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்திய ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணியும் வாங்கவில்லை.

இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.50 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் முதல் வீரர் இவர்தான்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

ரூ.1.5 கோடி விலைக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸை கைப்பற்றியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு வாங்கியுள்ளது கிங்கிஸ் லெவன் பஞ்சாப். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சை பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ரூ.1.50 கோடி விலைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது.

ஹனுமா விஹாரிக்கு ரூ.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. புஜாராவையும் (ரூ.50 லட்சம்) யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடி விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அவரது அடிப்படை விலை ரூ.1.50 கோடி. ரூ.1.50 கோடி விலைக்கு இங்கிலாந்து கேப்டன் மோர்கனை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.5.25 கோடி விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. முதல் ஆளாக ஆஸ்திரேலிய அணியின் கிறிஸ் லின் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.

கோடிகளில் ஏலம் போன வீரர்கள்
எண் பெயர் நாடு அடிப்படைதொகை ஏலம் அணி
1 கிறிஸ்லின் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி ரூ.2 கோடி மு.இ.
2 இயான்மோர்கன் இங்கிலாந்து ரூ.1.5 கோடி ரூ.5.25 கோடி கே.கே.ஆர்.
3 ராபின் உத்தப்பா இந்தியா ரூ.1.5 கோடி ரூ.3 கோடி ஆர்ஆர்
4 ஜேசன் ராய் இங்கிலந்து ரூ.1.5 கோடி ரூ.1.5 கோடி டிசி
5 ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா ரூ.1 கோடி ரூ.4.4 கோடி ஆர்சிபி
6 கிளன்மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி ரூ.10.75 கோடி கிங்ஸ்லெவன் பஞ்சாப்
7 பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி ரூ.15.5. கோடி கேகேஆர்
8 சாம்குரான் இங்கிலாந்து ரூ.1 கோடி ரூ.5.5 கோடி சிஎஸ்கே
9 கிறிஸ்மோரிஸ் தென்னாப்ரிக்கா ரூ.1.5 கோடி ரூ.10 கோடி ஆர்சிபி
10 கோல்டல் நைல் ஆஸ்திரேலியா ரூ.1 கோடி ரூ.10 கோடி மு.இ.
11 கார்ட்டல் மேற்கிந்திய தீவு ரூ.50 லட்சம் ரூ.8.5 கோடி பஞ்சாப்
12 பியூஸ் சாவ்லா இந்தியா ரூ.1கோடி ரூ.6.75 கோடி சிஎஸ்கே
13 விராட் சிங் இந்தியா ரூ.20 லட்சம் ரூ.1.9 கோடி எஸ்ஆர்எச்
14 கார்க் இந்தியா ரூ.20 லட்சம் ரூ.1.9 கோடி எஸ்ஆர்எச்
15 வருண் இந்தியா ரூ.30 லட்சம் ரூ.4 கோடி கேகேஆர்.
16 ஜெய்ஸ்வால் இந்தியா ரூ.20 லட்சம் ரூ. 2.4 கோடி ஆர்ஆர்.
17 தியாகி இந்தியா ரூ.20 லட்சம் ரூ.1.3 கோடி ஆர்ஆர்
18 பிஸ்னாய் இந்தியா ரூ.20 லட்சம் ரூ.2 கோடி பஞ்சாப்
19 ஹெட்மயர் மேற்கிந்திய தீவு ரூ. 50 லட்சம் ரூ.7.75 கோடி டி.சி.
20 ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலியா ரூ.1.5 ேகாடி ரூ.4 கோடி ஆர்சிபி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பிடித்து இருந்தனர். இதில் 3 வீரர்கள் ஏலத்தில் விலை போய் இருக்கிறார்கள்.

கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இந்த முறை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கூக்ளி, கேரம் உள்பட 7 விதமாக சுழற்பந்து ஜாலம் நிகழ்த்தக்கூடிய சென்னையை சேர்ந்த 28 வயதான வருண் சக்ரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே அவரை வாங்க நடந்த போட்டியில் கடைசியாக கொல்கத்தா அணி ரூ.4 கோடிக்கு சொந்தமாக்கியது. கடந்த சீசனில் அவர் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளரான எம்.சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயதான சித்தார்த் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்னொரு தமிழக வீரரான சாய் கிஷோரை 2-வது முறையாக விடப்பட்ட ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தனதாக்கியது. சென்னையை சேர்ந்த 23 வயது சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இந்த சீசனில் நடந்த சையது முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (20 விக்கெட்) வீழ்த்தியவர் ஆவார். சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். எஞ்சிய 8 தமிழக வீரர்களுக்கு ஏலத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

Leave a Response