முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக் கருதப்படும் அஃப்ரீன் பாத்திமாவின் தந்தை ஜாவேத் மொகமது-வின் வீடு இடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர் ஆர்வலர் அஃப்ரீன் ஃபாத்திமா, என்னையும், எனது பெற்றோர் மற்றும் சகோதரியும் அநியாயமாகக் கடத்தப்பட்டு காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அஃப்ரீன் ஃபாத்திமாடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவி மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர். 2019-2020-ல் டெல்லியின் ஷாஹீன் பாக்கில் CAA/NRC எதிர்ப்பு போராட்டங்களின் போது அஃப்ரீன் ஃபாத்திமாதீவிரமாக இருந்தவர். அவர் ஹிஜாப் மீதான தடைகளுக்கு எதிராக 300 இஸ்லாமியப் பெண்களுடன் போராட்டம் நடத்தினார்.
கடந்த அக்டோபரில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற தனது தங்கை சுமையா ஃபாத்திமாவுடன் இணைந்து ‘முஸ்லிமா அலகாபாத்’ என்ற ஆய்வு வட்டத்தை உருவாக்கினார். இந்த ஆய்வு வட்டத்தில் தற்போது 70 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளை நடத்தியுள்ளனர். அதில் ஹிஜாப் தடை மற்றும் அரச அடக்குமுறை மற்றும் நம்பிக்கைகள், அரசியல் மற்றும் அடையாளம் பற்றிய உரையாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
இவருடைய இந்தச் செயல்பாடுகளுக்குப் பழிதீர்க்கவே அவர் வீடு இடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல; சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை! தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச்சாசனத்தையும்தான்!
நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை இடிக்கிறீர்கள்! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் இன்றைக்குப் பேயாட்டமிடலாம்; வீடுகளை இடிக்கலாம்; வழக்குகளைத் தொடுக்கலாம்; மக்களை ஒடுக்கலாம்.
ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.