2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்? – கங்குலி பேட்டி

2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. அது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி தொடங்கும் இரு நேரத்திலும் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. போட்டியை இரவு 7.30 மணிக்குத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், வழக்கம் போல் மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும்தான் போட்டி தொடங்கும்.

இந்த முறை ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. நோ-பாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகிறது. அதேபோல டெஸ்ட் போட்டியில் இருப்பது போன்று கன்கஸன் மாற்று வீரரைக் களமிறக்கும் முறை அறிமுகமாகிறது.

அதாவது ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரைக் களமிறக்கி விளையாட வைக்கலாம்.

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை எங்கு நடத்தப்போகிறார்கள் என்று பல்வேறு யூகங்கள் எழுந்தன. குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்தப்படும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் வரும் மே 29-ம் தேதி மும்பையில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும். அதில் மாற்றமில்லை.

போட்டியின் அட்டவணை, போட்டிகள் தொடங்குவது, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரைவில் வெளியிடுவார்.

இது தவிர ஐபிஎல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக அகமதாபாத் மைதானம் அமைப்பதற்காக ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்பட உள்ளது. அது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்

Leave a Response