நீதித்துறைக்கு வெளிய சிறை வைத்துள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என தமிழ்நாடு முதல்வருக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..
திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 15.06.2022 அன்று 27-ஆம் நாளாக உண்ணாப்
போராட்டத்தைத் தொடர்கிறார்கள். உண்ணாப்போராட்டத்தில் இருந்தோரில் சிலர் மிகவும் பாதிக்கப்பட்டு
உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சிறைச் சிறப்பு முகாமில் மொத்தம் 115 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் மீது குற்ற வழக்குகள்
பதிவு செய்து அவ்வழக்குகள் நீதி மன்றங்களில் விசாரிக்கப்படவில்லை. வெறுமனே தடுப்புக் காவலில்
வைத்திருக்கிறார்கள்.
வழக்குகளோ – விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பதால், இவர்களைச் சிறப்பு
முகாமில் (Special Camp) வைத்திருப்பதாக இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தந்திரமாகப் பெயர் சூட்டி
ஏமாற்றுகின்றன.
இவ்வாறு எட்டாண்டுகள் உட்பட பல ஆண்டுகள் தொடர்ந்து திருச்சி நடுவண் சிறை முகாமில் பலர்
இருக்கிறார்கள்.
இவர்களின் உண்ணாப் போராட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கைகள் இரண்டு. ஒன்று குற்றவழக்கு உள்ளவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடத்துங்கள். நீதி மன்றம் தண்டனை வழங்கட்டும் அல்லது
விடுதலை செய்யட்டும். குற்ற வழக்கு இல்லாதவர்களைத் தமிழ்நாடு அரசு உடனே விடுதலை செய்ய
வேண்டும்.
மிக நீதியான இந்த இரு கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுச் செயல்படுத்துவதில் என்ன தடை?
இந்திய அரசு தடை போடுகிறதா?
இந்தச் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மேற்கண்ட இரு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில
ஆண்டுகளில் இவ்வாறான உண்ணாப் போராட்டங்கள் நடத்தினர். அப்போதெல்லாம் உயர் அதிகாரிகள்,
நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது அல்லது விடுதலை செய்வது என்ற இரண்டில், யார் யாருக்கு எது
பொருந்துமோ அந்த நீதியைச் செய்கிறோம் என்று உறுதி கொடுத்து உண்ணாப் போராட்டத்தை முடித்து
வைத்துள்ளார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.
நீதிமன்ற நடைமுறையே இல்லாமல் ஈழத்தமிழர்களோ அல்லது வேறு எந்த நாட்டினரோ அவர்களைச்
“சிறப்பு முகாம்” என்று அட்டை எழுதித் தொங்கவிடப்பட்டுள்ள சிறைக்குள் காலவரம்பின்றி அடைத்து
வைப்பது இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 21 (Article 21)-க்கு எதிரானது.
“21. நாட்டில் நிலவும் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, ஒருவரின் உயிரையோ (Life) அல்லது அவரது
இயங்கும் உரிமையையோ (Personal Liberty) அரசு பறிக்க முடியாது”.
இந்த உரிமை இந்தியாவின் குடிமக்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் தற்காலிகமாக வாழும்
வெளிநாட்டினர்க்கும் முழுமையாகப் பொருந்தும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கிறன்றன.
எட்டு ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளாகவோ, நீதிமன்றத்தில் வழக்கு
நடத்தாமல் ஈழத் தமிழர்களை திருச்சி சிறை முகாமில் அடைத்து வைத்திருப்பது இந்திய அரசமைப்புச்
சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
ஓர் அரசே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுமானால் அந்த நாட்டில் மண்ணின்
மக்களுக்கான மனித உரிமைகளும் இதே போல்தான் பறிக்கப்படும்.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இச்செயலைச் செய்யுமாறு ஒருவேளை இந்திய அரசு கூறினால் அதைத்
தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.
எட்டாண்டுகள் வரை திருச்சி சிறையில் உள்ளவர்களுக்கும் மனைவி மக்கள் – குடும்பத்தார் இருக்கிறார்கள்.
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களின் துயரத்தையும்
எண்ணிப்பார்த்து, அத்துயரத்தைத் துடைக்க வேண்டிய கடமையும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
இவர்களது கோரிக்கைகளை ஆதரித்து எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 6.6.2022 அன்று திருச்சி
தொடர்வண்டிச் சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, திருச்சி நடுவண் சிறைச் சிறப்பு முகாமில் உள்ள ஈழத்
தமிழர்களை விடுவித்து, வெளியே அனுப்ப வேண்டியவர்களை அனுப்புங்கள், வழக்கு நடத்த வேண்டிய
ஈழத்தமிழர்களை ஏதிலியர்கள் முகாம்களில் தங்கதங்க வைத்து வழக்கு நடத்துங்கள் என்று கனிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.