சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – பெருங்கூட்டம் கூடியதால் பரபரப்பு

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 14-11-2021 காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனப் பேருரையாற்றினார்.

அதன் சுருக்கம் பின்வருமாறு:-

முதன் முதலில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டவேண்டும் என்று முயற்சி எடுத்தவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்தான். ஆனால் அவர்களால் கட்ட முடியவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி வந்துவிடுகிறது. அதன்பின் இந்தப்பகுதியில் ஆட்சியாளராக இருந்த பெருந்தகை பென்னி குயிக் அவர்கள் தேனி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறண்டு இருப்பதைப் பார்த்து, மக்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதைப் பார்க்க சகியாமல், வெள்ளநீரைத் தேக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற பொதுநோக்கோடு, ஆங்கிலேய அரசு உதவவில்லை என்றாலும், தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று முல்லைப் பெரியாறு அணையைக் காட்டினார். அந்த நன்றியைத் தமிழர்கள் மறந்துவிடவில்லை. இன்றைக்கும் தேனி மாவட்டத்தில் பென்னி குயிக் என்ற பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கும், கடைகளுக்கும் வைத்துத் தமிழர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துவருகின்றனர். அந்த அணைக்கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் எங்கள் தாத்தன்கள், பாட்டன்கள்தான். முல்லைப்பெரியாறு அணையில் எங்கள் இன மூதாதைகளின் இரத்தமும் சதையும் கலந்துள்ளது. மாநில எல்லைப் பிரிப்பின்போது கெடுவாய்ப்பாக இடுக்கி மாவட்டம் கேரளாவோடு இணையவிட்டது நமது முன்னோர்கள் செய்த பெரும்பிழை. ஈடு இணையற்ற இந்தியத் தேசிய உணர்வோடு நமது முன்னோர்கள் இருந்ததினால் வந்த விளைவு அது. ஜின்னாவைபோல் பெருந்தலைவர் காமராசரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும் இருந்திருந்தால் அவர்களது பேரப்பிள்ளைகளான நாம் தெருவில் நிற்கவேண்டி இருந்திருக்காது. இடுக்கியை கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுக்க முயன்ற ஒரே தலைவர் நமது தாத்தா காயிதே மில்லத் அவர்கள் மட்டுமே. காவிரி உருவாகும் இடத்தில் 90 விழுக்காடு மக்கள் தமிழர்கள். குடகு தமிழர்களுடைய நிலம். குடகு மக்கள் தமிழ்நாட்டோடு இணைய வேண்டும் என்று போராடியபோது அன்றைக்கு இருந்த நம்முடைய தலைவர்கள் அதற்குச் செவிமடுக்காததால்தான் இன்றைக்கும் காவிரி உரிமையை நாம் இழந்து நிற்கிறோம். முதலில் இடுக்கியை தரமறுத்த ஐயா காமராசர், பின்பு பிரதமர் நேருவின் வலியுறுத்தலின் பேரில் இடுக்கியை கேரளாவுக்குத் தர ஒப்புக்கொண்டார். அதனால் தமிழ்நாட்டிடம் இருந்த முல்லைப்பெரியாறு அணை கேரளாவுக்குப் போய்விடுகிறது. அதேபோல, தமிழ்நாட்டிடம் இருந்த அணையைப் பாதுகாக்கின்ற உரிமையை கேரளாவுக்குக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஐயா எம்ஜிஆர் அவர்கள்.

139.5 அடி வரை நீரைத் தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்த போதும், ஆனால் அதைமீறி நீரின் அளவு 136 அடி உள்ளபோதே, தேனியில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்காமல், யாருக்கும் தெரியாமல் கேரளா அமைச்சர்கள் அத்துமீறி அணையைத் திறந்துவிட்டனர். ஆனால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஐயா துரைமுருகன் எங்களுக்குத் தெரிந்துதான் அணையைத் திறந்துவிட்டார்கள் என்கிறார். தெரிந்துதான் நடந்தது என்றால் அணை திறப்பதை ஏன் தடுக்கவில்லை?

அணை பாதுகாப்பற்றது என்பதால்தான் இடிக்க வேண்டும், என்று கேரள அரசு விரும்பினால், தற்போது இருக்கும் அணையை இடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக அணைக்கு உட்பகுதியில் பாதுகாப்பானதாக இன்னொரு வலுவான அணை கட்டுவோம். அணையைக் கட்டுவதற்கு ஆகும் செலவை இரு மாநில அரசுகளும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ளட்டும். கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணை சட்டமன்றத்தில் பாதுகாப்பானது என்று கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தில் அணை பாதுகாப்பற்றது என்று இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு இதை எதையும் கண்டுகொள்வதில்லை. முல்லைப்பெரியாறு அணையை இடிக்கும் கேரள அரசின் முடிவில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? அதுபற்றி எவ்வித கருத்தும் கூறாமல், எவ்வித கவலையும் இல்லாமல் அமைதி காக்கிறது. கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைப் புதைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்தபோது அதுபற்றியும் திமுக அரசு வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டை ஆள்வது முதல்வர் ஐயா ஸ்டாலினா அல்லது ஆளுநர் இரவியா என்று தெரியவில்லை. அதிமுக ஆட்சி அடிமை ஆட்சியாக இருந்தது; திமுகவின் ஆட்சி கொத்தடிமை ஆட்சியாக இருக்கிறது.

பேபி அணையைப் பாதுகாப்பதற்கு மரங்களை வெட்ட அனுமதி தராமல் 40 ஆண்டுகளாகக் கேரள அரசு இழுத்தடித்தது. ஆனால் தமிழ்நாடு அரசு குமரி மலைகளை வெட்டி கேரளாவுக்கு அனுப்பப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. மரங்களை வெட்டினால் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் மலைகள் மீண்டும் வளராது. அந்த மலைகள் கொள்ளைபோக ஏன் திமுக அரசு அனுமதிக்கிறது? இன்றும் குமரியில் மலைகளை வெட்டி கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. யாரும் மண்ணின் வளங்களைக் கொள்ளையடித்துப் போகக்கூடாதுதான். வளம் இல்லையென்றால் நிலம் ஏது? கேரள கம்யூனிஸ்ட் கட்சி அணையை இடிக்க வேண்டும் என்கிறது. இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முல்லைப் பெரியாறு அணையைக் காக்கப் போராடாமல் வாய்மூடி அமைதியாக இருக்கிறது. கேரளாவில் ஒரு சிலர் முல்லைப் பெரியாறு அணையை இடிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி இருக்கும்வரை அணையை இடிக்க முடியாது. ஒருபோதும் இடிக்க விடமாட்டோம்.

நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டால் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம். அதிகாரம் கையளிக்கப்படும்வரை மக்களோடு நின்று மக்கள் பிரச்சனைக்காகப் போராடுவோம். தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத நாங்கள் மக்களின் உரிமைக்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா அதிகாரமும் இருப்பவர்கள் மக்களுக்காகப் போராடவில்லை. முல்லைப் பெரியாறு, காவிரிக்காகப் போராடும் மாநில பாஜக, ஒன்றிய பாஜக அரசிடம் கூறி ஏன் அந்த மாநில அரசுகளைத் தடுக்கவில்லை? சர்வதேசம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்திற்கு மாநிலம் ஒரு முடிவை எடுக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட்டை எதிர்க்க காங்கிரஸ் பாஜகவை ஆதரிக்கிறது. மேற்கு வங்காளத்தில் மம்தாவை எதிர்க்க பாஜகவை, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆதரிக்கிறது. இவர்கள்தான் பாஜகவின் மெயின் டீம்.

எங்கள் முன்னோர்கள் போல நாங்கள் எங்கள் உரிமையை இழப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். முல்லைப்பெரியாறு அணையை இடிக்கும் முடிவை எடுத்தால், கேரளாவிற்குச் செல்லும் உணவுப் பொருள்களைத் தடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்களுக்கான உணவுப்பொருட்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவாவது கேரளா மக்கள் முல்லைப்பெரியாறு நீரைத் தடுக்க நினைக்கக்கூடாது. அருகில் இருக்கிற சகோதர இனமக்கள் புரிதலோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.

மதவாதத்திற்கு எதிராக இறுதிவரை உறுதியாகப் போராடிய அண்ணன் பழனிபாபா அவர்களின் நினைவுநாளை அரசு நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். இந்த மண்ணில் தாத்தா காயிதே மில்லத் மற்றும் அண்ணன் பழனி பாபா ஆகியோரை பற்றிப் பேசும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. மணல், மலை, காடு, ஆறு, இனம், மொழி எது அழிந்தாலும், தன் சாதியும் மதமும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பீர்களானால் நம்முடைய அழிவை யாராலும் தடுக்க முடியாது.

இது ஒரு தொடக்க நிலைதான். இத்தோடு அணையை இடிக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை கேரள மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு எடுப்பதை கேரள அரசு கைவிட வேண்டும். இந்தக் கருத்துருவாக்கம் வலுப்பெறுவதை, நிலைப்பெறுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். அதுதான் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை. இது தேனி மாவட்ட பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனை; தமிழ் இனத்தின் உரிமை பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response