நீட் தேர்வு நிரந்தரமாக இரத்து – பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது….

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வினை ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்தவர் என்னுடைய அன்புக்குரிய தலைவர் ஜெயலலிதா என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வினை அறிமுகப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடுமையான ஆட்சேபனையை கடிதம் வாயிலாக அப்போதைய பிரதமருக்கு தெரிவித்தார்.

பின்னர், 2012 ஆம் ஆண்டு மத்திய அரசால் அரசாணை வெளியிடப்பட்ட போது, தனது கடுமையான எதிர்ப்பினை ஜெயலலிதா பதிவு செய்ததோடு, தன் இறுதி மூச்சு வரை அதேநிலைப்பாட்டில் இருந்தார். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றியது உள்பட மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை அமையும் வகையில், இரண்டு சட்ட முன்வடிவுகள், அதாவது 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்ட முன்வடிவு மற்றும் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப்பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு ஆகியவை ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக அது பயனளிக்கவில்லை.

இந்தத்தருணத்தில், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் கலந்து கொள்ள பல சங்கடங்களை மேற்கொள்கிறார்கள்.

‘நீட்’ தேர்வு மட்டுமல்லாமல் அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத்தேர்வை நிரந்தமாக ரத்து செய்யும் வகையில் ஒரு கொள்கை முடிவை தாங்கள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response