தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு தடை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்….
சமூக நலத்தையே முதன்மைப்படுத்துகின்ற அறநோக்கு பண்பு கொண்டது தமிழர் அறம். ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளாத சிலர், அறிவார்ந்த தமிழ் சமூகத்தை கொச்சைப் படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இயக்குநர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள தி ஃபேமிலி மேன் 2 எனும் இந்தி இணையத் தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் தமிழர்களை வன்முறையாளர்களாகவும், விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மது அருந்துவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழர்களின் பண்பாடு குறித்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்தோ எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்த இயக்குனர் முயற்சி செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முக்கியமாக, தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர். இராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ்ப் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் இருக்கின்றன. இத்தகைய காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது.
கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் தமிழர்களின் வரலாற்றைத் திரித்துக் கூறுவது பெருங்குற்றம் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி இங்கு சுட்டிக்காட்டுகிறது.
ஈழப்போர் முடிந்து 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத இச்சூழலில், நீதி கேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டங்கள் வாயிலாகவும், குரலெழுப்பியும் வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளாமல் அல்லது விபரம் அறியாமல் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தி உள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் உரிய விளக்கம் அளிப்பதோடு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.