
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இளைஞர்கள் இணையும் விழா கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் நடந்தது. கட்சியில் இணையும் இளைஞர்களை வரவேற்று கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் சமஉ பேசியதாவது….
நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதோ,அவர் முதலமைச்சராகக் கூடாது என்பதோ எனது பார்வை இல்லை.அவர் திரைப்படங்களில் நடித்தார் என்பதற்காக 6 கோடி மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் அரியாசனத்தை, தமிழ் இனத்திற்காக ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத விஜய்க்கு வழங்குவார்களா?. அதுவும் அவர் கிங்மேக்கராக இல்லாமல்,கிங் ஆகவே தான் இருப்பாராம்.கரூரில் உயிரைப் பறி கொடுத்த உறவினர்களை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதும்,வீதியில் இறங்கிப் போராடும் துப்புரவுப் பணியாளர்களை என் வீட்டிற்கு வந்து உங்கள் குறைகளைக் கூறுங்கள் எனக்கூறுவதும் தமிழ்ப் பண்பாடா, இதுதான் அரசியலா?
இதைத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,கலைஞர்,நல்லகண்ணு போன்றோர் செய்தார்களா?
தமிழ்ச் சமூகத்தின் பெண்களும்,இளைஞர்களும் உங்கள் பாட்டுக்கு ஆடினால்,உங்களை விஜய் விஜய் என்று சொன்னால் உடனே முதலமைச்சர் ஆசை வந்துவிடுமா?
திமுக மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பொறுப்பிற்கு வந்துள்ளது என்பது,பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று, இரத்தம் சிந்தி, காவல்துறையினரிடம் அடி உதை வாங்கிய பிறகு மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி பின்னர் முதலமைச்சராக வந்துள்ளார். அவரை சி.எம் சார் என்றும், அங்கிள் என்றும் நையாண்டியாகவும், நக்கலாகவும் அழைப்பாயா?
வா களத்துக்கு வா. தமிழ்நாடு விவசாயிகளைப் பாதிக்கும் ஐட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு எதிராக எத்தனையோ தலைவர்கள் போராடி சிறை சென்றுள்ளார்கள். நீ அரசியல் பேசு, மக்களைச் சந்தி, ஓட்டு வாங்கு அது வேற விசயம். ஆனால் மற்ற தலைவர்களைச் சவாலுக்கு அழைப்பது, நக்கல் செய்வது, நையாண்டி செய்வதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தவெக தலைவர் நடிகர் விஜய் மீதான தவாக தலைவர் வேல்முருகனின் கடும் விமர்சனங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இருகட்சிகளையும் ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைத்தால் டிவிகே என்றுதான் வரும்.இதனால் கும்பகோணத்தில் டிவிகேவை வெளுத்த டிவிகே என்று உற்சாகமாக அக்கட்சியினரும் பொதுமக்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


