
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.அப்போதிருந்து அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. அவருக்கு உயர்மட்ட பொறுப்பு வழங்கப்படும் என பரவலாகப் பேசப்பட்டது.அது நடக்கவில்லை.
இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் முட்டல் மோதல் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.அதனால்,அண்ணாமலையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதமாக 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால்,கொந்தளித்த அண்ணாமலை அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடப்போவதில்லை என்றும் தடாலடியாக அறிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள், நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு அண்ணாமலை நற்பணி மன்றத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கினர்.
இதன் நிறுவன தலைவராக நெல்லையை சேர்ந்த வேல்கண்ணன் செயல்படுகிறார். இதனால் அண்ணாமலை தனிக்கட்சி துவங்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
அப்போது,என் மீதான நன்மதிப்பின் காரணமாக இதுபோன்ற அமைப்பை துவங்கியுள்ளதாகவும், தனக்கு இதில் துளியும் விருப்பமில்லை என்றும் கூறினார் அண்ணாமலை. இதனால் நற்பணி மன்றத்தின் செயல்பாடு சிறிது காலம் மந்தமானது.
இந்நிலையில்,இப்போது கட்சியிலிருந்து அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவந்த நிலையில் நெல்லை அரியகுளம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலை நற்பணி மன்ற தலைமை அலுவலகத்தில் நேற்று மாநில தலைவர் வேல்கண்ணன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
அதைத்தொடர்ந்து நற்பணி மன்ற தலைவர் வேல்கண்ணன் அளித்த பேட்டியில்…
அண்ணாமலை நற்பணி மன்றம் அரசியல் சாராத அமைப்பு. மன்றத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள், கர்நாடகா, புதுச்சேரி மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தலைவர் அண்ணாமலை எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நற்பணி மன்றம் சார்பில் தேர்தல் பணியாற்றி அதிகவாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்வோம். நாங்குநேரி, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட நற்பணி மன்றம் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்படும். சமூக, மக்கள் சேவை செய்வதே எங்கள் நோக்கம்.தேர்தலில் நற்பணி மன்றம் போட்டியிடாது.அதேநேரத்தில் தலைவர் அண்ணாமலை எத்தகைய முடிவு எடுத்தாலும் அவருக்கு நற்பணி மன்றம் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிற இந்த நேரத்தில் நற்பணி மன்றத் தலைவர் வேல்கண்ணன், தலைவர் அண்ணாமலை எத்தகைய முடிவு எடுத்தாலும் அவருக்கு நற்பணி மன்றம் துணை நிற்கும் என்று கூறியிருப்பதால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்கிற செய்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.


