
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.அப்போது அவர் கூறியதாவது….
தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறோம்.இன்று உலகமே ஒன்று என்ற சூழல் உருவாகிவிட்டது. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது.எனவே மூன்றாவது மொழியைப் படிப்பதில் தவறில்லை.இந்தத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்ற பெயரில் வேட்பாளர் கூட யாரென்று தெரியாமல் தவெகவுக்கு வாக்களித்துவிட்டனர்.நல்லவேளை தவெகவுக்கு அறுதிப்பெரும்பான்மையைக் கொடுக்காமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளனர்.
வரும் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க அவரின் தொண்டர்கள் பாடுபடுவோம்.ஜெயலலிதா சொன்னதைப்போல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்,எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை அழிக்கமுடியாது. எம்ஜிஆர்,ஜெயலலிதா காலம் தொட்டு கட்சிக்கு இதுபோன்ற பின்னடைவுகள் ஏற்படுவது வழக்கம்.இந்தச் சோதனைகளைக் கடந்து, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.
2006 இல் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததால்,திமுக மைனாரிட்டி ஆட்சியமைத்தது.தவெகவை எதிர்த்துதான் காங்கிரசு 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது,அவர்கள் எப்படி இப்போது தவெகவை ஆதரிக்கிறார்கள்? விசிக, இடதுசாரிகள் வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.தவெக அரசு, பெரும்பான்மை இல்லாமல் ஊசலாட்டத்தில் உள்ளதால்தான் அமமுகவின் எம்எல்ஏவை அபகரித்துள்ளனர்.
மன்னார்குடியில் அமமுக எம்எல்ஏ தவெகவையும் எதிர்த்து வெற்றிபெற்றவர்.அவரின் ஆதரவை எப்படி தவெக பெறலாம்? அதிமுகவை ஊழல் கட்சி என்றும்,மற்றும் சிலர் என்றும் சொன்ன விஜய்,எப்படி அதிமுகவின் 25 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறலாம்? அதிமுகவிலிருந்து சென்று தவெகவை ஆதரிக்கிறார்கள்.ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று சொல்பவர்கள்,அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவை ஆதரிப்பது எப்படி நியாயமாக இருக்கும்?
நாங்கள் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் உள்ளோம்.மன்னார்குடி எம்எல்ஏவுக்கு எதாவது தருவதாக சொல்லித்தானே தவெகவுக்கு அழைத்துள்ளீர்கள்,அது குதிரைபேரம் தானே.அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால்,உறுதியாக சிபிஐ விசாரணை கோருவோம்.அதன்பின்னர் இந்த ஆட்சிக்கு கஷ்டகாலம்தான். இடதுசாரிகள்,விசிக இன்னும் ஆறு மாதங்கள் தாங்குவார்களா?.எனவே தவெக ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏக்களின் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய வாய்ப்புள்ளது.அதிமுக பொதுச்செயலாளரால் மட்டுமே கொறடாவை நியமிக்க முடியும் என்பது குறித்து பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.சபாநாயகரால் இன்னும் எத்தனை நாட்கள் காலம் தாழ்த்த முடியும்? அதற்கும் காலக்கெடு உள்ளது.எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீதிமன்றம் சென்றால் எல்லாம் வெட்டவெளிச்சமாகி விடும்.
அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால்,சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும்.தவெக அமைச்சர்கள் பற்றி வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது.ரீல்ஸை நம்பி மட்டும் ஆட்சி நடத்த முடியாது.
ஜெயலலிதாவின் ஆட்சியமைக்க,ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும். மனவருத்தங்கள் இருந்தால் பேசித் தீர்க்கவேண்டும்.தவெக அதிமுகவை,ஜெயலலிதாவின் இயக்கத்தை அழிக்கப் பார்க்கிறது.அதனை தனிப்பட்ட கோபதாபங்களுக்காக விட்டுக்கொடுக்கக்கூடாது.அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்கள் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்தது.அதுபோல அதிமுக தலைவர்களும் பொறுமை காக்க வேண்டும்.எனவே அதிமுக தொண்டர்கள் பெயரைச் சொல்லி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் வரலாறு அவர்களை மன்னிக்காது.எம்ஜிஆர் தொடங்கிய,ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை விஜய் அழிக்கப்பார்க்கிறார் என்பதே உண்மை.அதற்கு யாரும் பலியாக வேண்டாம்.சட்டப்படி எடப்பாடி பழனிச்சாமிதான் பொதுச்செயலாளர், அவருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன.
சட்டைப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு,அதிமுகவையும், அமமுகவையும் அழிக்க,தவெகவுக்கு ஏஜெண்டாக செயல்படுகிறார்.அவர் எடப்பாடி பழனிச்சாமியைப் பார்த்து அம்மாவின் ஆத்மா மன்னிக்காது என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.ஜெயலலிதாவின் ஆத்மா செங்கோட்டையனை மன்னிக்காது
இவ்வாறு அவர் கூறினார்.


