தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி பல்லாயிரம் பேர் திரண்டனர்

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, நேற்று வெளியிட்ட அழைப்பில்…

இன்று மாலை நமக்கு பல வேலைகள் காத்துக் கொண்டிருக்கலாம். நாமில்லாமல் அவை நடக்காமல் போகுமா என தெரியாமல் இருக்கலாம். ஆனால், 2009ம் ஆண்டில் இதே நாளில் மொத்த அழிப்பையும் தீவிரமாக்கி மூன்று நாட்களில் 70,000 தமிழர்களை கொன்*று குவித்தார்கள். இந்தியா கைகட்டி வேடிக்கை பார்த்தது. அமெரிக்கா ஊக்குவித்தது. ஐ.நா கண்ணை மூடிக்கொண்டது. தமிழ்நாடு அதிர்ச்சியில் மெளனமானது.

அவர்கள் ஆயுதத்தை மெளனிக்கிறோம் என்ற பின்னர்தான் இத்தனையும் நடந்தது.அவர்களது ஆயுதம் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம்,இத்தனை தீவிரம் நடக்கவில்லை.ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே அமைதிக்கு உத்தரவாதம் என்றவர்கள்தான்,இதைச் செய்தார்கள்.

இந்த முகநூல்,ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் என்பவையெல்லாம் அன்றிருந்தால்,அதை நம் கண்ணீர் ஆக்கிரமிக்குமளவு கையாண்டிருப்போம்.ஆனால்,இன்றளவும், இந்த சனியன்களும் நம் துயரக்கதையை பேச விடுவதாயில்லை.நம்மை மெளனிக்கச் சொல்லி கழுத்தை நெறிக்கின்றன.

மெளனமாய் நிற்பது சரணாகதி என்று அவர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுகூர்வது கோழைத்தனமானதென அவர்கள் சொல்லலாம்.நமக்கு சிலுவை செய்யும் மரங்கள் உற்பத்தியாகும் காடுகளை எரிக்கும் நெருப்பு அரக்கனின் விதையை எவ்வாறு சுமப்பது?

அதை மெழுகுவர்த்தியின் நுனியில் சின்னதாய் அடைகாக்க கொடுக்கலாம் அல்லவா..ஆம் அந்த நெருப்புக்கங்கு மெழுகுவர்த்தியில் அடைகாக்கப்படட்டும்.அடுத்தத் தலைமுறையாவது அதைக்கொண்டு கைவிலங்கை உடைக்கட்டும்.

இன்று மாலை பெசண்ட்நகர் கடற்கரையில் 5:00மணிக்கு நினைவேந்துகிறோம்.

உங்களுக்கு பல முக்கிய வேலைகள் இருக்கலாம்.அவையெல்லாம் சில மணிநேரம் தாமதிக்கலாம்,தவறில்லை.
பிஞ்சுக்குழந்தைகளின் தலையில் குண்டுகளை வீசியவனுக்கு கண்டனம் தெரிவிக்க காலநேரம் பார்க்க வேண்டியதில்லை தானே..

அவர்களுக்காக மெழுகுவர்த்தியேந்தி கண்டனம் தெரிவிக்க நேரம் ஒதுக்கி வாருங்கள்.ஏனென்றால்,நாளை நாம் கொல்லப்பட்டால் நமக்காக அவர்கள்தானே அழுவார்கள்.வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நினைவேந்துவதற்குக் கூட போராடச் சொல்லும் நாடு இது.ஆறு ஆண்டுகள் போராடி தொடர் வழக்குகள் வாங்கி பெற்ற உரிமை நினைவேந்தல்.

போராடி வென்ற உரிமையை உயர்த்திப்பிடிக்க வாருங்கள்.

சந்திப்போம்.

இவ்வாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பெசண்ட் நகர் கடற்கரையில் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை நாளில் உயிர்ப்புடன் இருப்பதை உலகுக்கு உணர்த்தினர்.நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்,தமிழீழம் அமையும் வரை போராடுவோம் என்கிற உறுதியுடன் ஒன்றுகூடிய காட்சி மிரள வைப்பதாக இருந்தது.

– கதிர்

Leave a Response