தமிழினத்துக்கு முதுகில் குத்திப் பழக்கமில்லை – விகடன் விருது விழாவில் சத்யராஜ் அதிரடி

ஜனவரி 13-ம் தேதி போகிப்பண்டிகை அன்று மாலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கோடம்பாக்கமே மகிழ்வும் நெகிழ்வுமாகக் கலந்துகொண்ட ‘திறமைக்கு மரியாதை’ விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு அது! சிறந்த நடிகரில் ஆரம்பித்துச் சிறந்த ஒப்பனைக் கலைஞர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் விருதுகளை, கலைஞர்கள் மேடையேறி ஆளுமைகளின் கைகளால் வாங்கினர்.

ஆஸ்கர் மேடையை அரசியல் மேடையாக மாற்றியவர் மார்லன் பிராண்டோ… அதே பாணியில் ஆனந்தவிகடன் மேடையில் மக்களின் அரசியலை முழங்கினார் சத்யராஜ். சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை சமூக செயற்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் கௌசல்யா சங்கரிடம் பெற்றுக்கொண்டார்.

இருவரையும் பேசவிட்டு அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சத்யராஜ். “ஈழத்தமிழர் பிரச்னை தொடங்கி தமிழர்கள் ஒடுக்கப்படுவது குறித்தெல்லாம் தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்’’ என்பதை வலியுறுத்தினார் திருமுருகன் காந்தி. “சாதி ஆணவப்படுகொலை, சாதி வன்மத்துக்கு எதிராகப் போராடுவதுதான் என் வாழ்நாள் போராட்டமாக இருக்கும்” என்றார் கௌசல்யா.

“இனி எல்லா விருது மேடைகளிலும் நிழல் ஹீரோக்கள் கையால் விருதுவாங்கமாட்டேன் இவர்களைப்போல நிஜ நாயகர்கள் கையால்தான் விருதுகளை வாங்குவேன்’’ என சத்யராஜ் சொல்ல, கைத்தட்டல் ஒலியில் சென்னை டிரேட் சென்டர் சில ரிக்டர் அதிர்ந்திருக்கும்!

“நிஜ வாழ்க்கையில் நீங்க கட்டப்பாவா இருந்தா யாரைக் கொல்லுவீங்க” என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் “எங்க தமிழினத்துக்கு யாரையும் முதுகுல குத்திப் பழக்கமேயில்ல. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர்தான்” என்றார். அது அரங்கில் இருந்த அத்தனை பேருக்குமான மயிர்க்கூச்செறியவைத்த தருணம்!

நன்றி -ஆனந்தவிகடன்

Leave a Response