
2023 ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, நாடாளுமன்றம்,
சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்தை
அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது.
இதற்காக,அவசரகதியில் நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் ஏப்ரல் 16 அன்று தொடங்கியது. முதல்நாளில் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசனத் திருத்தம் (131 ஆவது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை
மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரசு, சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும்
அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியில் முடிந்தது.
அரசியலமைப்பு சட்டத் திருத்தம் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், இரு அவைகளிலும்
அந்தளவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்தும் இந்த மசோதாவை பாஜக அறிமுகப்படுத்தியது.
இது எதிர்க்கட்சிகளுக்கு விரித்த வலை என்று கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு
மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாகப் பரப்புரை செய்வதற்காகவே இதை நடத்தியிருக்கிறது பாஜக.
இதன்மூலம் எதிர்க்கட்சிகள் பாஜகவின் அரசியல் பொறியில் சிக்கிக் கொள்ளும் என்று நினைத்தனர்.ஆனால் அது பாஜகவுக்கே வினையாக முடிந்திருக்கிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.இந்தச் சூழலில்,மகளிர் மசோதா தோல்விக்குக் காரணம் எதிர்க்கட்சிகள்தான் என்ற கருத்தை தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடியே பேசினார்.இந்தக்கருத்து, 2 மாநில தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக மாறும் என்று நம்பி பேசினர்.ஆனால் பாதகமாகிவிட்டது என்று பாஜக.வினரே கூறுகின்றனர்.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பது பா.ச.க. அரசின் உண்மையான நோக்கமாக இருப்பின், இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களிலும் அனைத்து சட்டமன்றங்களிலும் 33% இடங்களை மகளிருக்கு அளிக்கும் வகையான சட்டத்தைக் கொண்டுவருவதற்கு பா.ச.க. அரசு தயாரா? என நாடு முழுவதும் அறைகூவல்கள் விடுக்கப்படுகின்றன.
இதனால்,எதிர்க்கட்சிகளுக்கு வைப்பதாக நினைத்த பொறியில் பாஜகவே சிக்கிக்கொண்டு பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


