திருமுருகன்காந்தி திடீர் கைது – கலைஞரிலிருந்து கவனத்தைத் திருப்ப திட்டமா?

ஜெர்மனியிலிருந்து பெங்களூரு வந்து இறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நாவில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்துப் பேசியதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி திருமுருகன் காந்தி உரையாற்றியதால் அவர் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் தான் கைது செய்ததாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மே பதினெழு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளின் இந்த அடக்குமுறையினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த பல நாட்களாகவே திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை, சிகிச்சை, அவருடைய மரணம், மெரினா சர்ச்சை, பிரமிக்க வைத்த இறுதிப்பயணம் ஆகியனவற்றிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆளும்வர்க்கம் செய்யப்படும் சதி இதுவென்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இது உண்மையாக இருந்தாலும் வியப்பில்லை.

Leave a Response