
ஐபிஎல் எனப்படும் மட்டைப்பந்துப் போட்டிகள் தொடங்கி 18 ஆண்டுகள் முடிந்துவிட்டன. முதல் ஆண்டிலிருந்தே கோப்பைக்காகப் போராடி வந்த பெங்களூரு அணியின் கனவு இவ்வாண்டு பலித்தது.
நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி ரஜத் பட்டிதார் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
முதலாண்டிலிருந்து ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலி, 17 ஆண்டுகளாக கோப்பைக்காக போராடிய நிலையில், அவரது கனவு 18 ஆவது சீசனில் நிறைவேறியது.
பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றியை பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.அந்தவகையில், ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு நேற்று பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஐபிஎல் கோப்பையுடன் விமானத்தில் வந்த ஐபிஎல் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஆர்சிபி அணியினரை பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வரவேற்றார். விராட் கோலிக்கு கன்னட கொடி மற்றும் ஆர்சிபி கொடியை கொடுத்து வரவேற்ற டி.கே.சிவகுமார், மற்ற வீரர்கள் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்குப் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து எச்.ஏ.எல் விமான நிலையத்திலிருந்து ஆர்சிபி வீரர்கள் தனியார் விடுதிக்குச் சென்றனர். அவர்கள் சென்ற வழிநெடுக, சாலையின் இருபுறங்கிலும் இரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரளாக நின்று, ஆர்சிபி மற்றும் விராட் கோலி என முழங்கினர். மேலும், விதான சவுதாவில் ஆர்சிபி அணிக்கு மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான இரசிகர்கள் விதான சவுதா முன் திரண்டனர். விதான சவுதா மற்றும் கப்பன் பார்க்கைச் சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆர்சிபி வீரர்கள் விடுதியில் இருந்து விதான சவுதாவிற்கு வருவதற்கு முன்பாகவே விதான சவுதாவில் திரண்ட இரசிகர்கள், ஆர்சிபி கோசத்தை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விதான சவுதாவிற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் விதான சவுதாவுக்கு வெளியே திரண்டு நின்றனர். ஆர்சிபி ஜெர்சி அணிந்துகொண்டு, ஆர்சிபி கொடியை கையில் ஏந்திக்கொண்டு திரண்டிருந்த இரசிகர்களால் விதான சவுதாவே அதிர்ந்தது.
மாலை 4 மணியளவில் விதான சவுதாவில் நடந்த விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, ஆர்சிபி வீரர்களைக் கவுரவித்தனர். ஆர்சிபி வீரர்களுக்கு மைசூரு டர்பன் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அதன்பின்னர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் விழாவைக் காண முன்னதாக ஆயிரக்கணக்கான இரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டனர். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவைக் காண இரசிகர்கள் ஏராளமாகத் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இரசிகர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.
அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் தரையில் விழுந்தனர். இதில், பலர் படுகாயமடைந்தனர். கூட்டத்தில் இருந்த மருத்துவர்கள் சிலர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். நெரிசலில் சிக்கி மயங்கிய நிலையில் இருந்த இரசிகர்களை மீட்ட காவல்துறையினர் அருகில் உள்ள சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை, லேடி கர்சன் மருத்துவமனை, வைதேகி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கூட்ட நெரிசலில் காயமடைந்த சிலரை காவல்துறையினர் தங்கள் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில், ஒரு சிறுமி, 3 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆபத்தான் நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்பு உள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் கூடியதால் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.
சின்னசாமி மைதானத்திற்கு வெளியே இரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் நகர முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், வேறு வழியின்றி தடியடி நடத்தினர்.விதான சவுதா பகுதியில் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கிய இரசிகர்கள், மைதானத்திற்குள் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முரட்டுத்தனமாக மேற்கொண்டனர். சில இரசிகர்கள் ஸ்டேடியத்தை ஒட்டியிருந்த மரத்தின் மீது ஏறினர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் கேட் எண் 6 அருகே உள்ள வாயிலில் ஏற முயன்ற ஒரு வாலிபர் தவறி விழுந்து கால் முறிந்தது. மேலும், தடுப்பு வேலி விழுந்து 3 பேருடைய கால்கள் உடைந்தது. கேட் எண் 12 இல் ஒரு பெண் இரசிகர் சரிந்து விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், அதிகமான பயணிகளை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. அதனால், நேற்று மாலை 4.30 மணி முதல் கப்பன் பார்க், விதான சவுதா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 33 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். இது எதிர்பாராத சம்பவம். 35,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட சின்னசாமி மைதானத்திற்கு திடீரென இலட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.இது நடந்திருக்கக்கூடாது. ஆனால் நடந்துவிட்டது. கட்டுக்கடங்காத, அளவுக்கு அதிகமான கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்துவதும் கடினம். நான் போரிங் மருத்துவமனை மற்றும் வைதேஹி மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டேன். கொண்டாட்டங்களின்போது இதுபோன்ற துயரம் நடந்திருக்கக்கூடாது. இதுதொடர்பாக மாநில அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்றதன் வெற்றிக் கொண்டாட்டத்தை இரசிகர்கள் முன்னிலையில், சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஆசையுடன் வந்த இரசிகர்கள் உயிரிழந்ததால், சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெரியளவில் இல்லாமல் சிறியளவில் எளிமையாக ஒருசில நிமிடங்களில் முடித்துக்கொள்ளப்பட்டது. அதிகளவிலான கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்படாமல் எளிமையாக அந்த நிகழ்வு முடித்துக்கொள்ளப்பட்டது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மற்றும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோர் இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினர்.
சின்னசாமி ஸ்டேடியம் அருகே பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், இந்த சம்பவத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்த சரியான தகவல்கள் தெரியவில்லை. அனைத்து தகவல்களும் கிடைத்தவுடன் தெரிவிப்பேன். இந்தத் துயரச் சம்பவத்துக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரசிகர்களும் மக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். ஆரம்பத்தில் ஆர்சிபி அணி வெற்றிப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை இரத்து செய்தோம். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசாரின் கருத்துகளின் அடிப்படையில், கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் அதை இரத்து செய்தோம் என்றார்.
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் படிந்த இந்த இரத்தக்கறை மனிதநேயமுள்ளோரைப் பதைபதைக்க வைத்துள்ளது.விளையாட்டை அரசியலாக்கி வைத்திருப்பதன் வெளிப்பாடுதான் இது என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


