இந்திய ஒன்றியம் முழுவதும் இயங்கி வரும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசிடம் இருந்த அதிகாரத்தைப் பறித்து மாநில ஆளுநரிடம் வழங்கி பல்கலைக்கழக மானியக் குழு எடுத்துள்ள முடிவுக்கு பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியம் என்று பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் கூறிவருகின்றன.
ஏற்கெனவே பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு பலவழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை மாநில ஆளுநர்களுக்கு வழங்கி இருக்கும் பல்கலைகழக மானியக் குழுவின் முடிவு மேலும் ஆபத்தான ஒரு நிகழ்வு.
இது குறித்து விவாதிப்பதற்காக இன்று பெங்களூருவில் உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. மாநாட்டை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக துணைமுதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்து கொள்கிறார்.
இம்மாநாட்டில் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
கல்வித்துறையைச் சீரழிக்க முயலும் ஒன்றிய அரசுக்கெதிராக நடக்கும் இந்த மாநாடு நிச்சயம் பல விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.இதனால் ஒன்றியஅரசு கலக்கமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.