
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
234 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,023 பேர் போட்டியிட்டனர். இதில் 3,579 ஆண்கள்,443 பெண்கள்,ஒரு திருநங்கை ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.300 கம்பெனி துணை இராணுவ வீரர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் 85 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி 17.69 விழுக்காடு பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் 11 மணி நிலவரப்படி 37.56 விழுக்காடும், மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 விழுக்காடும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 விழுக்காடும், 5 மணி நிலவரப்படி 82.24 விழுக்காடும் இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி 85 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
ஆனாலும், இறுதி வாக்குப்பதிவு நிலவரம் இன்றுதான் தெரியவரும். அப்போது சிறிதளவு மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 இலட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 இலட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 இலட்சம் பேர் என மொத்தம் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர்.இறுதியாக சுமார் 69 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விழுக்காடு உயர்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக் 78 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர்-க்கு பிறகு வாக்குப்பதிவு 85 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.


