
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது.
இதில், 152 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. 167 பெண்கள் உட்பட 1,478 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வகையில், 16 மாவட்டங்களில் நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆளும் திரிணாமுல் காங்கிரசு, பாஜக இடையே நடைபெறும் கடும் போட்டி நிறைந்த இத்தேர்தலில், முதல் கட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் 18.76 விழுக்காடாகவும், காலை 11 மணி அளவில் 41.11 விழுக்காடாகவும், பிற்பகல் 1 மணி அளவில் 62.18 விழுக்காடாகவும் வாக்குப்பதிவு படிப்படியாக உயர்ந்தது. பதற்றம் பிறைந்த முர்ஷிதாபாத், ஜங்கல்மஹால் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி நிலவரப்படி 89.93 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 3.60 கோடி வாக்காளர்களில் 91.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.


