
நீட்,தமிழில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இடஒதுக்கீடு தொடர்பாக திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு,திமுக,பொதுவுடைமைக் கட்சிகள்,விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமுஎகச மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை…
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.நீட் தேர்வை நீக்கக்கோரி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் இயக்கங்கள்,கட்சி வேறுபாடு இல்லாமல் நீட் தேர்வை எதிர்ப்பது என்ற முடிவின் அடிப்படையில் கடந்தஆட்சியின்போது,சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
தற்போது டெல்லி தொடங்கி நாடுமுழுவதும் நடைபெறும் நீட்டிற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, மீண்டும் தமிழ்நாட்டில் நீட்எதிர்ப்புப் போராட்டங்கள் பரவலாக மேலெழுந்து வருகிறது.பல்வேறு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும் தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்புப் போரட்டங்களை,மறியல்களை நடத்தி வருகிறார்கள். அந்தப்போராட்டங்களில் தமிழ்நாடு காவல்துறையின் நியாயமற்ற அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாக்க ஒன்றாகவே இருந்தது.
டெல்லியில் நடைபெற்ற “காக்ரோச் ஜனதா கட்சி” நடத்திய போராட்டத்தின்போது,டெல்லி காவல்துறை நடந்துகொண்ட முறையை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.”அறவழிப் போராட்டங்களை நடத்த குடிமக்களுக்கு முழுஉரிமை இருக்கிறது” என்று பலமுறை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதைப் தற்போதும் வலியுறுத்தியுள்ளது.
இந்தச்சூழலில் தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் சார்பாக இன்று மாநிலம் முழுக்க நீட்தேர்வுக்கு எதிராகவும்,உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை நீக்கக்கோரியும் வாகனப் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்கள்.எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு,பிரச்சாரம் தொடங்க சில மணிநேரம் முன்பு இந்தப் பிரச்சாரத்திற்கு தடைவிதித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
நீட்எதிர்ப்புப் போராட்டத்தில்,டெல்லி காவல்துறையினர் போராடுபவர்களை குறிவைத்து அத்துமீறிக் கைது செய்ததையும்,துன்புறுத்துவதையும் செய்து வருகிறார்கள்.போராளிகள் மீது தவறான கருத்துகளைப் பரப்பிவிடும் வேலையை ஒன்றிய ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் தொடங்கி,சமூகஊடகங்கள்வரை செய்துவருகிறார்கள். தொடர்ந்து போராளிகள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்தி வதந்தி பரப்பும் வேலையையும் செய்து வருகிறார்கள்.அவர்களின் இச்செயலுக்கு வலுசேர்க்கும் விதமாக,தமிழ்நாடு ஆட்சியாளர்களும் நடந்துகொள்வதாகவே தோன்றுகிறது.
அரசுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லவும்,பரப்புரை செய்யவும்,வன்முறை இல்லாமல் போராடவும் இந்திய அரசியல் சட்டம் நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.அந்த அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசும்,அதன் காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.ஜனநாயக இயக்கங்களின் போராடும் உரிமையை பறிக்கும் தமிழ்நாடு அரசை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சட்டவிரோதச் செயலை,தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஜனநாயக சக்திகளும் கண்டிக்கவேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.தமிழ்நாடு அரசு இந்த நீட்எதிர்ப்பு பிரச்சார இயக்கத்திற்கு அனுமதி வழங்குவதோடு, இதுபோன்ற அறவழி இயக்கங்களுக்கு எதிர்காலத்தில் எந்தத்தடையும் விதிக்காமல் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது.
– மதுக்கூர் இராமலிங்கம்
தலைவர்
– களப்பிரன்
பொதுச்செயலாளர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


