இன்று வி.பி. சிங் நினைவு நாள் (நவம்பர் 27,2008)
விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.
அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார்.80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத் தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.
இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்கீடு என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.
பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.வுடன் சமரசமாகப் போயிருக்கலாம். மண்டல் குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்குமுன் பத்தாண்டுகால ஆட்சியாளர்கள் அப்படித்தானே நடந்துகொண்டார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆதரவை விலக்கி தன் முகவரியைக்காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்துகொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. (விதிவிலக்கு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஏ.கே. அப்துல்சமது என்னும் பெருமகனார்)
அப்போதுகூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா? சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!
மும்பையில் வன்முறையைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!
திராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், தலைவரிடத்திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.
வி.பி. சிங் மறைவைக்கூட இருட்டடித்தன உயர்ஜாதி ஊடகங்கள்! அந்த அளவுக்கு அவர் சமூகநீதியாளர் என்பதுதான் அதன் ஆழமான பொருளாகும்.
வி.பி. சிங் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது.முடியவே முடியாது! வாழ்க வி.பி.சிங்
– மயிலாடன்