காவிரி ஆணையம் உத்தரவிட்டாலும் தண்ணீர் தரமுடியாது – கர்நாடக முதல்வர் ஆணவம்

காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேற்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு கர்நாடகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் இதுகுறித்து ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் கூடி நீர்ப் பங்கிட்டை உறுதி செய்கிறது.இந்தநிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீரைத் திறந்துவிட வேண்டும்.இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்யவேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார்.அதன்பின்னர் கர்நாடகாவில் போதிய மழை பெய்யாத காரணத்தினால்,குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இச்சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது.காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து,காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54 ஆவது அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.அந்தக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் நீர்வளத்துறையின் முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு,காவிரி தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வளப் பிரிவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் மத்திய தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வளப் பிரிவின் பிரதிநிதிகள் ஆகியோர் சென்னையில் இருந்தவாறு காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இதேபோன்று கர்நாடகா,கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதில் கர்நாடகவை சார்ந்த பிரதிநிதிகள் மட்டும் கூட்டத்தில் நேரடியாக டெல்லி சென்று பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் கர்நாடக பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து மாநிலஅரசோடு கலந்து ஆலோசித்த பின்னர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது,

மழைப்பற்றாக்குறை மற்றும் வறட்சி போன்ற சூழல் நிலவும் நிலையில்,தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஆலோசிக்க வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன்.இதில் காவிரி பிரச்னை தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்படும்.மேலும் காவிரி பிரச்னை மற்றும் மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும் 3 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய்,பெங்களூரு வருகிறார்.நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட விரும்பவில்லை.நாட்டின் சட்டம் உள்ளது.நாம் ஒருவரையொருவர் மதிப்போம்.அனைவரின் உணர்வுகளையும் மதிப்போம்.மாநிலங்கள் வேறாக இருந்தாலும் நாடு ஒன்றுதான்.நாம் இந்தியர்கள் என்றார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா கை விரித்துள்ளது குறித்து சென்னையில் ஆய்வுக்குச் சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கர்நாடகா அமைச்சர் மறுத்தது,முதல்வர் விஜய் பெங்களூர் செல்வது குறித்து கேள்விகளை கேட்டனர்.

ஆனால் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் சிரித்தபடியே சென்றார்.இதைப் பார்த்து,அவர் பதில் அளிக்க முடியாமல் சிரித்தபடி சென்றாரா, தவிர்ப்பதற்காக சிரித்தபடி சென்றாரா அல்லது தனது நிலையை நினைத்து சிரித்தபடி சென்றாரா என்பது தெரியாமல் மக்கள் குழம்பியிருக்கின்றனர்.

Leave a Response