
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது.2021 ஆம் ஆண்டு, இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி 2021 பிப்ரவரி 26 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது.பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதியஅரசுகள் பதவி ஏற்றன.
இதனடிப்படையில், மேற்குவங்க சட்டப்பேரவை பதவிக்காலம் வருகின்ற மே 7 ஆம் தேதியும், தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் மே 10 ஆம் தேதியும், அசாம் மே 20 ஆம் தேதியும், கேரளா மே 23 ஆம் தேதியும், புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் ஜூன் 15 ஆம் தேதியும் முடிவுக்கு வருகின்றன.
அதற்கு முன்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். புதிய அரசுகள் பதவி ஏற்கவேண்டும்.
இதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேர்தல் ஆணையக் குழுவினர் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டனர். இறுதியாக மேற்குவங்கத்தில் நேற்று ஆய்வு முடிந்தது.
அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையக் குழுவினர் நேற்று இரவு டெல்லி சென்றனர். எனவே விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு மற்றும் கேரளா வருகிறார்.பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 22 ஆவது தவணைத் தொகை ரூ.19000 கோடியை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் நிகழ்ச்சி 13 ஆம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு, அதாவது மார்ச் 13ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மார்ச் 17 ஆம் தேதிக்குள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்துவிடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கவேண்டும் என்பதற்காகவே தேர்தல் தேதி அறிவிப்பை பாஜக தாமதப்படுத்துவதாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.


