மம்தா அதிரடி அமித்சா பேரரதிர்ச்சி – மேற்குவங்க பரபரப்பு

மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் ஆலோசனை நிறுவனமாகச் செயல்படுகிறது ‘ஐ-பேக்’ (I-PAC) எனும் நிறுவனம்.இந்நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரசுக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராக உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்கக்கூடிய நிறுவனமாகவும், அந்தக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடகப் பிரிவை கவனித்துக் கொள்ளக்கூடிய நிறுவனமாகவும் ‘ஐ-பேக்’ உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக் ஜெயினின் இல்லம், ‘ஐ-பேக்’நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அந்த நேரத்தில், பிரதிக் ஜெயினின் வீட்டுக்கு அதிரடியாக நேரில் சென்றார் திரிணமூல் காங்கிரசு தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி.

பின்னர் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது; அரசியலமைப்புக்கு எதிரானது.அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.
நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?. இதற்கும், நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார் எனக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறையின் விசாரணையில் மம்தா பானர்ஜி தலையிட்டுள்ளதாகவும் இது சட்டத்துக்கு விரோதமான செயல் என்றும் பாஜக மூத்த தலைவரும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் இடத்துக்குள் முதலமைச்சர் மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் வருவது நெறிமுறையற்றது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. மத்திய அமைப்பின் விசாரணையில் நேரடியாக தலையிடும் முயற்சி இது என குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறை விசாரணை நடக்கும்போது அந்த இடத்துக்குச் சென்று ஆவணங்களை மீட்டு வந்தது இந்திய ஒன்றிய அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.இந்த நிகழ்வால் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மம்தா பானர்ஜி இப்படிச் செய்வார் என்று சற்றும் எதிர்பாராத அமித்சா பேரரதிர்ச்சி அடைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response