
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக, பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்தக் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தேர்தலில், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்தமுறை 50 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜக பங்கு கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது எடப்பாடியிடம் இந்த விசயத்தைக் கூறினார் என்றும் அதோடு, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தாக வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.இவற்றைக் கேட்டு எடப்பாடி அதிர்ந்து போனார் என்றும் சொல்லப்படுகிறது.
இவை தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து அதன் பின்னர் அறிவிப்பதாகக் கூறிவிட்டு சென்னை வந்திருக்கிறார் எடப்பாடி.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. அப்போது அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளைச் சேர்ப்பது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தாக வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளதால்,அவர்களை எப்படி கூட்டணியில் சேர்ப்பது? என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவ்விரு கட்சி வட்டாரங்களிலும்,இவை தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும்? என்கிற பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவிவருகிறது.


